பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

169

இதற்கு விடை சீவக சிந்தாமணியில் கிடைக்கிறது. வேள்வியின் பொருட்டும், உணவின் பொருட்டும் விலங்குகளைக் கொல்வோர் தம்முயிரைத் தாமே கொன்றவராவர். இவர்கள் செய்த கொலைப் பாவம், யானையின் தோலைப் போர்த்தவர் கொல்லப்படுவது எவ்வாறு நிச்சயமாகுமோ அதுபோல, இவர்களைக் கொல்வது நிச்சயம் என்னும் கருத்து சிந்தாமணிச் செய்யுளில் கூறப்படுகிறது. அச்செய்யுள் இது.

"வேள்வியாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெய் ஆடவர்கை வாளிவாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல் கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்தும் இன்னணமே நாள்உலப்பித் திட்டார் நமர்அலா தாரெல்லாம்.

- (முத்தி இலம்பகம் 189.)

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், யானையின் பசுந்தோல் பிற ருடம்பிற் பட்டால் கொல்லுமென் றுணர்க என்று விளக்கம் கூறி யிருக்கிறார். எனவே, சிவபெருமான் யானையின் தோலை உரித்து, அதில் இரத்தம் உலர்வதற்கு முன்னரே, ஈரமான தோலைப் போர்த்த போது அதைக் கண்டவர்கள், முக்கியமாக உமையம்மையார், அஞ்சி நடுங்கினார்கள் என்பதற்குக் காரணம் இவ்விளக்கத்திலிருந்து அறிகிறோம். அன்றியும், இக்கதைக்குத் தத்துவக் கருத்தையும் உணர்கிறோம். அஃதாவது, யானைத் தோலைப் போர்த்துங்கூட இறைவன் இறவாமலிருக்கிறான் என்பது. “சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவாமூவாத் தன்மையுடைய வராயிருப்பதுபோல, சிவன் யானைத் தோலினாலும் இறவாதவர்; எதனாலும் அழிக்கப்படாதவர் என்னும் தத்துவக் கருத்தை இதனால் அறியலாம்.

وو

(புலித்தோலை அணிந்தவர் என்பதற்குக் கோபத்தை அழித்தவர் என்று தத்துவப்பொருள் கூறுவர் அது போன்று, போர்த்தவரை அழித்துவிடும் யானைத்தோலினாலும் அழியாதவர் என்பது இக்கதையின் உட்பொருள்.)

காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவரிலும், முத்தீச்சுரர் கோயில் சுவரிலும் யானையுரித்த பெருமான் சிற்ப உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் யானையின் தோலை உரித்து, சிவபெருமான் தமது திருமேனியில் அத்தோலைப் போர்த்துக்கொள்வது போலவும், அதனைக் கண்டு அம்மையார் அஞ்சுவது போலவும் அமைந்திருக்கிறது. பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அழகிய சிற்பங்கள் காலத்தின் கொடுமைக்கு உட்பட்டு இப்போது சிதைந்துள்ள நிலையிலும், இச் சிற்பத்தின் கம்பீரமும் அழகும் ஓரளவு வெளிப்படுகின்றன.