பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

தலையாலங்கானம் என்னும் இடத்தில் நிகழ்ந்த போரிலே சோழனையும் சேரனையும் அவர்களுக்குத் துணையாக வந்த வேளிர் களையும் வென்று புகழ்பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனார் நேரில் சென்று பாடியிருக்கிறார். (புறம்-23)

'ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை

ஆலங் கானத் தமர்கடந் தட்ட

காலமுன்ப! நிற் கண்டனென் வருவல்.'

- (புறம்-23: 15-17)

என்று முன்னிலையில் வைத்து இவர் கூறுவது காண்க. இச்செய்யுளின் கீழ்க்குறிப்பு, 'பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது' என்று கூறுகிறது.

‘உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை யுலங்கப் பண்ணிப் பிணியுறு முரசங் கொண்ட காலை நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்

சிதைத்தலுய்ந் தன்றோ நின்வேல், செழிய!

-(புறம்-25:5-9)

என்று மேலும் இப்புலவர் அப்பாண்டியனை விளித்துக் கூறுகிறார். மீண்டும் புறம் 371-ஆம் செய்யுளிலும் இவர் அப்பாண்டியனைப் பாடியுள்ளார்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியனுக்குப் பின்னர் பாண்டி நாட்டை அரசாண்டவன். கோவலனைக் கொலை செய்வித்துக் கண்ணகியிடம் வழக்குத் தோற்று அரசு கட்டிலிற்றுஞ்சியவனும் ஆரியப்படை கடந்தவனுமாகிய நெடுஞ்செழியனுக்குப் பிறகு கொற்கையிலிருந்து வெற்றிவேற்செழியன் பாண்டிய நாட்டை அரசாண்டான். வெற்றிவேற்செழியனுக்குப் பிறகு முடிசூடியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். எனவே, சேரன் செங்குட்டுவனுக்குப் பிறகு இப்பாண்டியன் இருந்தான் என்பது தெளிவாகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனார் நேரிலே முன்னிலைப்படுத்திப்