பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறீன் வைத்தியர்*

(Dr. SAMUEL FISK GREEN)

அமெரிக்கன் மிஷன் என்னும் கிறிஸ்தவச்சங்கம் 1816-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. இந்த அமெரிக்கன் மிஷன் சங்கத்தார் உயர்தரக் கல்வியையும் சையன்ஸ் என்னும் சாத்திரங் களையும் கற்பிப்பதற்காக 1823-இல் வட்டுக் கோட்டை என்னும் இடத்தில் “செமினாரி" யொன்றை ஏற்படுத்தினார்கள். இந்தச் செமினாரி அக் காலத்தில் சர்வகலாசாலைக் கொப்பாகச் சிறப்புற்று விளங்கிற்று. உயர் தரக் கல்வியைக் கற்பித்த இந்தச் செமினாரியின் விசேஷம் என்ன வென்றால், இதில் தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கு, எபிரேய பாஷை களும், நில அளவை சாஸ்திரம், வான சாஸ்திரம், மாலுமி சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களும் கற்பிக்கப்பட்டமை ஒருபுறமிருக்க, இதில் வாசித்த பிள்ளைகளுக்கு உணவு முதலியவை இலவசமாகக் கொடுக்கப் பட்டதும் இலவசமாகக் கல்வி கற்பிக்கப்பட்டதுமே ஆகும். இந்தக் கலாசாலை, அக் காலத்தில் ஆசியா கண்டத்திலேயிருந்த கலா சாலை களில் தலை சிறந்து விளங்கிற்று. இவ்விதம், அமெரிக்கன் மிஷன் சங்கம் தமிழிலங்கையில் அக்காலத்திற் செய்துவந்த தொண்டு போற்றற்

பாலது.

இந்த அமெரிக்கன் மிஷன் சார்பாகக் கிறீன் வைத்தியர் (Dr.S.F.Green) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மானிப்பாய் என்னுமிடத்தில் ஒரு வைத்தியசாலையை 1847-இல் நிறுவி நோயாளர்களுக்குச் சிகிச்சைகள் செய்துவந்தார். அஃதன்றியும் அநேக மாணவருக்கு மேல் நாட்டு முறைப்படி வைத்திய சாஸ்திரத்தைக் கற்பித்துவந்தார். அமெரிக்க மிஷன் சங்கத்தார் எல்லாக் கல்வியையும் சாஸ்திரங்களையும் தேச பாஷையில் கற்பிக்கவேண்டும் என்னும் உயர்ந்த கருத்துள்ளவர்களா யிருந்தார்கள். அக்கொள்கையைப் பின்பற்றிக் கிறீன் வைத்தியரும் வைத்திய சம்பந்தமான சாஸ்திரங்களை எல்லாம் அறிஞர் பலரின் உதவிகொண்டு தமிழில் மொழி பெயர்த்து எழுதினார். வைத்திய *செந்தமிழ்ச்செல்வி, 15:6, 1937.