பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-18

இச்செய்யுளில் காதல் மணம் தமிழியல் என்று கூறப்படுவது காண்க. எனவே, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். அந்நூல் தமிழ் நுதலிற்று என்று உரை கூறியதன் கருத்து. ‘அகப்பொருளைக் கூறிற்று' என்று பொருள்படுதல் காண்க. அன்றியும் குறிஞ்சிப்பாட்டின் இறுதிக் குறிப்பு, “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்கு” என்று இருப்பதன் கருத்து, ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அகப் பொருளைத் தெரிவிப்பதற்காகப் பாடின குறிஞ்சிப்பாட்டு என்பதும் அறியப்படு கிறது. ஐந்திணை ஐம்பதின் பாயிரச் செய்யுள், ஐந்திணை ஐம்பதை ஓதாதவர் செந்தமிழ் சேராதவர் என்பதன் கருத்து, ஐந்திணை ஐம்பதைப் படியாதவர் அகப்பொருளை அறியமாட்டார் என்பதும் தெரிகிறது. இதனால், தமிழ் என்னுஞ் சொல்லுக்கு அகப்பொருள் என்னும் அர்த்தம் இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருக்கோவையார் என்னும் நூலிலே, தலைமகளைக் கண்டு காதல் கொண்டு வருந்திய தலை மகனுடைய உடல் வாடியிருப்பதைக் கண்ட அவனுடைய தோழன் கூறியதாக ஒரு செய்யுள் உண்டு. அச்செய்யுளிலும், அகவொழுக்க மாகிய காதல் “தமிழ்” என்று கூறப்படுகிறது. அச் செய்யுள்,

என்பது.

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின்

ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ அன்றி

ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா? தடவரைத்தோட் கென்கொ லாம்புகுந் தெய்தியதே

இச்செய்யுளில், “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்று (அதாவது, சிவபெருமான் மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்து ஆராய்ந்த அகப்பொருள் என்று) பொருள்படக் கூறியிருப்பது காண்க. சிவபெருமான் இயற்றிய அகப்பொருள் இலக்கண நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்பது பெயர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. அந்நூல் கூறிய பொருள் தமிழ் (அகப்பொருள்) என்று அதன் உரையாசிரியர் கூறியிருப்பதும் கருதத்தக்கது.