பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

35

கம்பரும் தமது இராமாயணத்தில் இச்சொல்லை இந்தப் பொருளில் வழங்கியுள்ளார். இலங்கையில் போர் நடந்தது. அந்தப் போரிலே இந்திரசித்து மாண்டான். அதனைக் கண்ட தேவர்கள், “இனி இராவணனுக்கு அரசாட்சி நிலைக்காது என்று அறிந்து, மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள். அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் அவர்கள் அணிந்திருந்த உடைகளும் அவிழ்ந்து விட்டன. அப்போது அவர்கள், கொல்லாத விரதமுடைய சமண முனிவர்களைப்போல நிர்வாணமாக இருந்தார்கள். தங்கள் உடை அவிழ்ந்து விட்டதையும் அறியாமல் அவர்கள் ஆனந்தத்தில் மூழ்கி ஆரவாரம் செய்தார்கள் என்று கம்பர் பாடுகிறார்;

வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலவன் விளித லோடும் செல்லாதிவ் விலங்கை வேந்தற் கரசெனக் களித்த தேவர் எல்லோரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது

கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்8

துறவிகளுக்குக் கடவுளர் என்னும் பெயர் உண்டு என்பதற்கு இன்னும் பல இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். இடம் பெருகும் என்றஞ்சி இதனொடு நிறுத்துகிறேன். நிற்க.

துறவிகளுக்குக் கடவுள் என்று பெயர் இருந்தது போலவே, தெய்வம் என்னும் பெயரும் வழங்கி வந்தது. இந்தக் காலத்தில் தெய்வம் என்னும் சொல்லுக்குத் தேவன் என்றும், முழுமுதற் கடவுள் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆனால், பண்டைக் காலத்தில் தெய்வம் என்னும் சொல்லுக்கு முனிவர், துறவி என்னும் பொருளும் இருந்துவந்தது. அதாவது, கடவுள் என்னும் சொல் அக்காலத்தில் துறவிகளாகிய முனிவரைக் குறித்ததுபோலவே, தெய்வம் என்னும் சொல்லும் பண்டைக்காலத்தில் முனிவர்களுக்குப் பெயராக வழங்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில், இச்சொல் இப்பொருளை இழந்து விட்டு, தேவர்களுக்கும் பரம் பொருளுக்கும் பெயராக வழங்கப்படுகிறது. அப்பர் எனப்படுகிற திருநாவுக்கரசர் தெய்வம் என்னும் சொல்லை முனிவர் அல்லது துறவிகள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். அச்செய்யுள் இது:

முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்

முறைமுறையால் “நந்தெய்வம்” என்று தீண்டித் தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று

தவமென்று அவஞ்செய்து தக்க தோரார். 9