பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கு - மேற்கு

கிழக்கு மேற்கு என்னுஞ் சொற்களின் வரலாற்றினை ஆராய்வோம். கிழக்கு மேற்கு என்றால், கிழக்குத் திசை மேற்குத் திசை என்பது பொருள் அல்லவா? ஆனால், இந்தச் சொற்களுக்குப் பழைய பொருள் இவை யல்ல. கீழ் அல்லது கிழக்கு என்றால் பள்ளம் அல்லது தாழ்வு என்பது பொருள். மேல் அல்லது மேற்கு என்றால் மேடு அல்லது உயர்வு என்பது பொருள். தாழ்வு அல்லது பள்ளத்தைக் குறிக்கும் கிழக்கு என்னும் சொல்லும், உயர்வு அல்லது மேட்டைக் குறிக்கும் மேற்கு என்னும் சொல்லும் இக்காலத்தில் திசைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றன. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன இக்காலத்து வழங்கும் திசைப் பெயர்கள். ஆனால், பண்டைக்காலத்தில் குணக்கு, குடக்கு, தெற்கு, வடக்கு என்று திசைப் பெயர்கள் கூறப்பட்டன.

கிழக்கு என்றால் பள்ளம் அல்லது தாழ்வு என்பது நேரான பொருள் என்று கூறினோம். அதற்கு உதாரணம் காட்டுவோம்.

செறுநரைக் காணில் சுமக்க, இறுவரை காணில் கிழக்காம் தலை 1

என்பது திருக்குறள்.

வலிமையுள்ள பகைவரைக் கண்டால், காலம் வரும் வரையில் அப்பகைவரைத் தலையினால் சுமந்திரு; காலம் வந்ததானால் உடனே அப்பகைவரைக் கீழே எறிந்துவிடு என்பது இச்செய்யுளின் கருத்து. இதில், கீழ் தாழ்வு பள்ளம் என்னும் பொருளில் கிழக்கு என்னும் சொல் வழங்கப்பட்டிருத்தல் காண்க.

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில்,

புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல்

2

குடுமி யெழாலொடு கொண்டு கிழக்கிழிய2

என்னும் அடியில் கிழக்கு என்னும் சொல் வருகிறது. இதற்குப் பழைய உரையாசிரியர், கிழக்கென்றது கீழான பள்ளங்களை என்று உரை எழுதியிருப்பது காண்க.