பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்றம்

நாற்றம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஏதோ துர்நாற்றம் வீசுவதாகக் கருதி மூக்கைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். நாற்றம் என்னும் சொல்லைப் பற்றி ஆராயப் போகிறேனே தவிர நாற்ற முள்ள இடத்திற்கு அழைத்துக் கொண்டு போகமாட்டேன். இக்காலத்தில் நாற்றம் என்னும் சொல்லுக்குத் துர்நாற்றம் என்னும் பொருள் ஏற்பட்டுவிட்டது. ஆனால், முற்காலத்தில் நாற்றம் என்னும் சொல்லுக்கு நறுமணம் என்னும் சிறந்த பொருள் இருந்தது. இந்தச் சொல் என்ன பாவம் செய்ததோ! முற்காலத்தில் நறுமணம் என்னும் உயர்ந்த கருத்துப் பெற்றிருந்த இந்தச் சொல், இக்காலத்தில் துர்மணம் என்னும் இழிந்த பொருள் பெற்றுக்கொண்டது. இப்போது பேச்சுவழக்கிலாயினும் நூல்வழக்கிலாயினும் நாற்றம் என்றால் துர்நாற்றம் என்பதுதான் பொருள். பண்டைக் காலத்தில் நாற்றம் என்றால் நறுமணம் என்பதுதான் பொருள்.

பழைய நூல்களில் இந்தச் சொல் நறுமணம் என்னும் பொருளில் வழங்கியுள்ளதை இங்குக் காட்டுவோம்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.

என்பன திருக்குறட் பாக்கள். இவற்றில் நாற்றம் என்னும் சொல் நறுமணம் என்னும் பொருளில் வழங்கியுள்ளது காண்க.

மாணிக்கவாசகப் பெருமான், தாம் அருளிய திருவாசகத் திலே, கடவுளை நறுமணத்திற்கு ஒப்பிடுகிறார். அவ்விடத்தில் நாற்றம் என்னும் சொல்லை ஆண்டிருக்கிறார்.

நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!

என்று அவர் கூறியிருப்பது காண்க.