பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

தாண்டவம் ‘புஜங்க லளிதம்' எனப்படும். ஆன்மாவாகிய பாம்பை ஏந்தி, அதை அச்சுறுத்தி ஆடும் தாண்டவம் 'புஜங்கத்திராசம் எனப்படும். காத்தல் செயலாகிய தாண்டவத்தில், ஆன்மாவாகிய பாம்பு முக்கிய இடம் பெறுகிறது.

இனி, இந்தத் தாண்டவத்தின் உருவ அமைப்பைப் பார்ப்போம். சந்தியா தாண்டவத்தில் சிவபெருமானுக்கு எட்டு அல்லது பத்துக் கைகளும் அமைப்பது உண்டு. ஆனால், பொதுவாக நான்கு கைகளைத்தான் அமைப்பது வழக்கம். வலதுகைகள் இரண்டில் ஒரு கையில் துடியும், மற்றொரு கையில் அபய முத்திரையும் இருக்கும். அபய முத்திரைக்குப் பதிலாக மயிலிறகை ஏந்தியிருப்பதும் உண்டு. (இடதுகைகள் இரண்டில் ஒரு கையில் பாம்பை ஏந்திக் கொண்டிருப்பார்; மற்றோர் இடதுகையை வீசிய கரமாக கஜ ஹஸ்தமாக) அமைத்திருப்பார். சந்தியா தாண்டவத்தில் தீச்சுடர் இடம்பெறுவது இல்லை.

சந்தியா தாண்டவ மூர்த்தம் சிலவற்றில் முயலகன் உருவம் இருப்பதும் உண்டு; சில மூர்த்தத்தில் முயலகன் இருப்பது இல்லை. முயலகனைப் பாம்பின் உருவமாகக் கையில் ஏந்தியிருப்பதனால், சில சந்தியா தாண்டவ மூர்த்தத்தில் முயலகன் உருவம் அமைப்பது இல்லை.

சந்தியா தாண்டவ மூர்த்தியின் இடதுபுறத்தில் கௌரி அம்மையாரும், வலதுபுறத்தில் நந்திதேவரும் இருந்து தாண்டவத்தைக் காண்கிறார்கள். கௌரி அம்மையாருக்குப் பதிலாகத் திருமால் இருந்து காண்கிறார் என்று மயமதம் என்னும் சிற்பநூல் கூறுகிறது. சிவ சக்தியைக் கௌரியாகவும் திருமாலாகவும் கூறுவது உண்டு ஆகையால் இதில் தவறு இல்லை.

சந்தியா தாண்டவத்தில் புஜங்கத்திராசம் என்னும் கௌரி தாண்டவத்தின் சிற்ப உருவம் நற்காலமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. (படம் 3 காண்க) வெண்கலத்தினால் செய்யப்பட்ட தொன்மை வாய்ந்த இச்சிற்ப உருவம் காஞ்சிபுரத்துக்கு அடுத்த கூரம் என்னும் கிராமத்திலிருந்து கிடைத்திருக்கிறது. இடதுகையில் பாம்பை ஏந்திக் கொண்டு நடராசர் தாண்டவம் செய்வதுபோல இச்சிற்ப உருவம் அமைந்திருக்கிறது. பாம்பு உருவத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டது. திருவாசி முதலிய உறுப்புகளும் இச்சிற்பத்தில் காணப்படவில்லை. அவை கெட்டுப் போயின போலும்.