பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

107

இந்தத் தாண்டவத்தை இறைவன், பாண்டி நாட்டுத் திருப்புத் தூரில் நிகழ்த்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இது பல்லவர் காலத்துச் சிற்பம் என்று கூறினோம். பல்லவர் ட்சி ஏறத்தாழ கி.பி. 10 -ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தபடியால், இச்சிற்பம் 10 -ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். அதாவது கி.பி. 700-க்கும் 950-க்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சிற்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்தப் புஜங்கத் திராசத் தாண்டவத்திற்குரிய பாட்டின் இசை நட்டபாஷை என்றும், தாளம் சிம்ம நந்தனம் என்னும் காரணாகமம் கூறுகிறது. நட்டபாடை என்பது நாட்டைக் குறிஞ்சி அல்லது நாட்டை என்பதாம். இந்த இராகம் எட்டுவகைச் சுவைகளில் மருட்கை, உவகை என்பவற்றைக் கொடுப்பதென்றும் கூறப்படுகிறது.

இனி, காத்தல் செயலின் மற்றொரு தாண்டவமாகிய புஜங்க லளிதம் என்பதைக் காண்போம். பாம்பை அழகுற அணிந்து ஆடின படியால் ' புஜங்க லளிதம்' என்று பெயர் பெற்றது. கார்க்கோடகன் என்னும் பாம்பைச் சிவபெருமான் அணிந்துகொண்டு ஆடியபடியால் இத் தாண்டவத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது என்று மயமதம் என்னும் நூல் கூறுகிறது. கயிலாய மலையிலே, மாலை நேரத்திலே, பார்வதி அம்மையாரை இரத்தின ஆசனத்தில் அமரச் செய்து, அவர் காண இறைவன் இத்தாண்டவத்தை ஆடியருளினார் என்றும், அவ்வமயம் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும் ஒருங்கு கூடியிருந்து அதனைக் கண்டு களித்தனர் என்றும் காரணாகமம் கூறுகிறது.

இத்தாண்டவத்தை இறைவன் ஆலமரத்து அடியில் இருந்து ஆடினார் என்று மயமதம், சிற்ப சங்கிரகம் என்னும் நூல்கள் கூறுகின்றன.

இத்தாண்டவ உருவத்தில் சிவபெருமான் காலடியில் முயலகன் காணப்படுவதில்லை. இச்சந்தியா தாண்டவ உருவம் வெவ்வேறு விதமாக அமைக்கப்படுகின்றது. பாம்பு ஒன்றை அதன் தலைப்புறமும் வால்புறமுமாக இரண்டு கைகளால் பிடித்துத் தலைக்குமேல் தூக்கி நின்று ஆடுவதாக இவ்வுருவம் அமைக்கப்படுவது வழக்கம். பாம்பைத் தமது அரையில் சுற்றி அணிந்து இறைவன் இந்நடனத்தைச் செய்வதாக