பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

109

உருவம் முயலகனாக இருக்கலாம். அல்லது சிவபெருமானுடைய பூதகணங்களில் ஒன்றாக இருக்கலாம். முயலகன் என்றே தோன்றுகிறது. தாண்டவச் சிற்பங்களில் முயலகன் மிதிபடாமல் தனித்து இருக்கிற சிற்பம் இது ஒன்றுதான்.

தாண்டவமூர்த்தியின் சடைமுடி அவிழாமல் புனைந்து கட்டிய படியே இருக்கிறது. அவருடைய முகத்தில் மகிழ்ச்சிக்குறி காணப் படுகிறது. அமைதியும், மகிழ்ச்சியும் தெளிவாகக் காணப்படுகின்றன. இது இன்பக் காத்தல் சந்தியா தாண்டவமாகும்.

திருமழபாடி சிற்பம்

உடையார்பாளையம் தாலுக்காவில் திருமழபாடி என்னும் ஊர்ச் சிவன் கோவிலில் சந்தியா தாண்டவச் சிற்ப உருவம் ஒன்று கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. (படம் 5 காண்க). இந்தத் தாண்டவமூர்த்தியின் காலடியில் முயலகன் உருவம் இல்லை. வலது கையொன்றில் துடி இருக்கிறது; மற்றொரு வலது கையில் அபய முத்திரை காணப்படுகிறது. இடது கையொன்றில் பாம்பை ஏந்தி யிருக்கிறார். முயலகனே பாம்பின் உருவமாக இருக்கிறான் என்பது கூறாமலே விளங்குகிறது. மற்றோர் இடது கையை வீசிய கரமாகத் தூக்கி உள்ளங் கையைப் பாம்பின் தலைமேல் கவிழ்த்து ஆதரவு கொடுக்கிறார். வலது காலைத் தரையில் ஊன்றியும், இடது காலை மடக்கித் தூக்கியும் இருக்கிறார். இந்த நிலை இவர் தாண்டவக் கூத்தாடுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது.

இடது பக்கத்துக் காலின் அடியில் ஒருவர் அமர்ந்து கூத்துக்கு ஏற்பக் குடமுழா வாசிக்கிறார். (ஆனால், படத்தில் இது காட்டப்பட

வில்லை.)

இந்தத் தாண்டவத்தில் காணப்படுகிற சிறப்பு என்னவென்றால், பொதுவாக இடது கையில் இருக்கிற தீச்சுடர் காணப்படாமல், அதன் இடத்தில் பாம்பு உருவம் அமைந்திருப்பதுதான். வலது கையில் இருக்கிற துடிபடைத்தல் செயலையும், மற்றொரு வலது கையில் இருக்கிற அபய முத்திரை காத்தல் செயலையும் தெரிவிக்கின்றன. அழித்தல் செயலைக் குறிக்கிற தீச்சுடர் காணப்படாமல் அதன் இடத்தில் ஆன்மாவைக் குறிக்கிற பாம்பு காணப்படுகிற படியால், இந்தத் தாண்டவத்தில் அழித்தல் செயல் நிகழவில்லை என்பது தெரிகின்றது.