பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாவது

அழித்தல் செயலாகிய சங்கார தாண்டவம்

உயிர்கள் செய்த இருவினைகளுக்குத் தக்கபடி அவைகளுக்கு உடம்பு, பொறி, புலன், இடம், துய்த்தல் முதலியவற்றைக் (தனு, கரணம், புவனம், போகங்களைக்) கொடுத்து, அவ்வினைப்பயனைத் துய்த்துக் கழிக்கிற வரையில் நிலைபெறச் செய்து, பிறகு அவ்வுடம்பு முதலிய வற்றை இறைவன் அழித்துவிடுகிறார். (அழித்தல் என்பது உயிரை அன்று என்பதும், உயிருக்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றை அழித்தல் என்பதும் முன்னரே கூறப்பட்டது.) இச்செயலைக் குறிக்கும் தாண்டவம் சங்கார தாண்டவம் என்று கூறப்படுகிறது.

அழித்தல் செயலாகிய சங்கார தாண்டவத்தின் மூர்த்தம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. பாண்டி நாட்டிலே, மதுரை மாநகரத்துக்கு அருகிலே, இவ்வுருவம் மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை அகழ்ந்தெடுத்து இப்போது சென்னை மாநகரத்துப் பொருட்காட்சி சாலையில் வைத்திருக்கிறார்கள். (படம் 10 காண்க). இப்போது இதற்குத் திருவாசி இல்லை.

இந்த நடராச மூர்த்தத்துக்கு மாறுகால் தாண்டவம் என்று சென்னை நகரப் பொருட்காட்சிச்சாலையார் பெயர் கொடுத்திருக்கிறார்கள். குஞ்சித பாதமாக இருக்கவேண்டிய இடது காலுக்குப் பதிலாக, இச்சிற்பத்தில் வலதுகால் குஞ்சிதபாதமாக (தூக்கிய திருவடியாக) இருப்பது பற்றி இதற்கு இப்பெயர் கொடுத்தார்கள் போலும்! இது தவறான பெயர். சிவபெருமான் கால் மாறியாடினார் என்னும் திருவிளையாடல் புராணக் கதையை நினைவுபடுத்திக் கொண்டு இதற்கு இப்பெயர் இட்டனர் போலும்! இந்தச் சிற்ப உருவத்தை நன்றாக ஊன்றிப் பார்த்தால், இது மாறுகால் தாண்டவம் அன்று என்பதும், இதன் சரியான பெயர் சங்கார தாண்டவமூர்த்தம் என்பதும் நன்கு விளங்கும். இதனை விளக்கிக் கூறுவோம்.