பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

119

கோவிலில் இல்லை. இந்தக் கோவிலில் என்றென்றும் காட்சியளித்துக் கொண்டிருக்க வேண்டிய இந்தத் திருவுருவம், எப்படியோ தனிப்பட்டவர் கையில் சென்று, கடைசியாக இப்போது வடக்கே எங்கேயோ ஒரு நகரத்தில் இருக்கிறதாம்! நமது நாட்டில் பணம் படைத்தவரும், பதவி படைத்தவரும் செய்துவருகிற திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. 'பொருளாட்சி போற்றாதார்க் கில்லை' என்னும் அறிவுரை ஏட்டில் இருக்கிறதே தவிரத் தமிழனின் அறிவில் பதியவில்லை. நமது மூதாதையர் அருமையாகச் செய்துவைத்த இந்தக் கலைச் செல்வத்தைத் தமிழ்நாடு இழந்துவிட்டது.

கொடுமுடிச் சிற்பம்

இன்னொரு திரிபுர தாண்டவத் திருமேனி, ஈரோடு தாலுக்கா கொடு முடி என்னும் ஊரில் சிவன் கோவிலில் இருக்கிறது. (படம் 12 காண்க). இது திருவரங்குள நடராசர் போன்ற உருவந்தான். ஆனால், திருவடி யின் கீழே முயலகன் இல்லை. பதுமபீடத்தின் மேல் இறைவன் தமது திருவடிகளை மாற்றி மாற்றி ஊன்றி நடனம் புரிகிற அமைப்பாக இது இருக்கிறது. சடைமுடி, துடி, தீச்சுடர், அபயகரம், வீசிய கை ஆகியவை யெல்லாம் திருவரங்குள நடராச மூர்த்தியைப் போன்றே உள்ளன. திருவக்கரைச் சிற்பம்

திண்டிவனம் தாலுக்கா திருவக்கரை என்னும் ஊர்ச்சிவன் கோவிலில் திரிபுர தாண்டவ (திரோபவ தாண்டவ) மூர்த்தம் இன்னொன்று கிடைத்திருக்கிறது. (படம் 13 காண்க) இது மற்றவைகளைவிடச் சற்றுப் புதுமையானது.

இந்த மூர்த்தத்திலே கட்டுண்ட சடைமுடியும், துடி, தீச்சுடர், அபயம் ஆகிய முத்திரைகளும், வலது பக்கமாகத் தாழ்ந்துள்ள வீசிய கரமும் காணப்படுகின்றன. திருவடியின் கீழே முயலகன் கைகால்களை ஊன்றிக் குழந்தை தவழ்வதுபோல எதிர்ப்புறம் நோக்கியிருக்கிறான். அவனுடைய முதுகின்மேல் இறைவனுடைய இடதுபாதம் ஊன்றி நிற்கிறது. வலது பாதம் மடக்கித் தூக்கி உயர்ந்திருக்கிறது. ஆனால், இப்பாதம் குஞ்சிதபாதமாக அமையவில்லை. இந்தத் தூக்கிய பாதத்தை முயலகன் முதுகில் ஊன்றப்போகிறது போலப் புலப்படுகிறது. பாசத்துடன், 'கட்டுண்டு கிடக்கிற முயலகனாகிய ஆன்மாவுக்குப் பக்குவநிலை ஏற்படும்படி