பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடராச மூர்த்தம்

ஆனந்த தாண்டவப் பெருமானுடைய திருவுருவம் நூல்களில் சொல்லோவியமாகக் கூறியிருப்பதைக் கலைவல்ல சிற்பிகள் அழகமைந்த சிற்ப உருவமாகச் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஏனைய தாண்டவ உருவங்களைப் போலவே இந்த ஆனந்த தாண்டவ உருவமும் செம்மைபெற அமைந்து கண்ணுக்கு அழகையும் கருத்துக்கு இன்பத்தையும் தருகிறது.(படம் 16 காண்க.)

சடைமுடியில் கங்கை, நிலாப்பிறை, கொக்கிறகு, தலையோடு, பாம்பு இவைகளை அணிந்திருக்கிறார். தாண்டவம் செய்யும் வேகத்தினாலே, சடைமுடி அவிழ்ந்து புரிசடைகள் இருபுறமும் அலைகின்றன. புரிசடையின் பிரிவுகள் 5,7 அல்லது 9 ஆக இருக்கும். ‘ஒன்பது போலவர் கோலக் குழற்சடை' என்றார் அப்பர் சுவாமிகள். தாண்டவ வேகத்தினாலே சடைப்புரிகள் மட்டும் ஆடுகின்றன என்று நினைக்க வேண்டா; ஏனைய பொருள்களும் ஆடுகின்றன:

66

ஆதிபரன் ஆட, அங்கைக் கனல்ஆட, ஓதும்சடை ஆட, உன்மத்த முற்றாட, பாதிமதி ஆடப், பாரண்ட மீதாட,

நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே."1

நெற்றிக்கண்ணும், புன்முறுவல் பூத்த இதழும், மலர்ந்த முகமும் மனத்தைக் கவர்கின்றன. இடது காதில் பத்திர குண்டலமும், வலது காதில் மகர குண்டலமும் இருக்கின்றன. சில உருவங்களில் சங்கக் குழையும் பாம்புக் குண்டலமும் இருப்பதும் உண்டு.

நான்கு கைகள் உள்ளன. வலது கைகளில் துடியும் அபய முத்திரையும் உள்ளன. அபய கரத்தின் முன்கையில் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு படமெடுத்தாடுகிறது. இடது கைகள் ஒன்றில் தீச்சுடர் இருக்கிறது. மற்றொரு கை வீசிய கரமாக நீட்டித் தூக்கிய திருவடியை அழகுறக் காட்டுகிறது.