பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

219

கலந்து அவற்றில் உள்ள ஏ விட்டமின் அழிந்து போகிறது, ஆகையால் அவைகளைச் சமைக்கும் போது மூடி வைத்துச் சமைக்க வேண்டும். மேலும் அதிகநேரம் சமைப்பதும் கூடாது.

பி. விட்டமின்:

பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து, விட்டமின்களில் மிகவும் முக்கியமானது. இப்படிச் சொல்வதனாலே மற்ற விட்டமின்கள் முக்கியமானவை அல்ல என்று கருத வேண்டா. விட்டமின்கள் தேக சுகத்துக்கு மிக இன்றியமையாதவை. அவைகளிலும் இன்றியமை யாதது பி. விட்டமின்.

பி. விட்டமின் என்னும் இந்த உயிர்ச்சத்து உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. உடம்பில் உண்டாகிற தேய்வு கழிவுகளை இது நிரப்புகிறது. நரம்புகளையும் தசைகளையும் பலப்படுத்துகிறது. உடம்புக்குள்ளே இருந்து கடினமாக உழைத்து வருகிற உறுப்புகளாகிய மூளை, இருதயம், ஜீரணக் கருவிகளாகிய தீனிப்பை, குடல்கள், ஈரல், குண்டிக்காய் முதலியவைகளை இந்த பி. விட்டமின் பலப்படுத்து கிறது. இந்த விட்டமின் உடம்பில் குறையுமானால், அஜீரணம், பேதி, மலச்சிக்கல், வயிற்றில் நோய், சோர்வு முதலிய நோய்கள் உண்டாகும்.

இந்த முக்கியமான உயிர்ச்சத்து, அரிசி கோதுமை கேழ்வரகு கம்பு சோளம் முதலிய தானியங்களிலும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சைப் பருப்பு, உளுத்தம் பருப்பு முதலிய பருப்பு வகைகளிலும், மொச்சைக் கொட்டை, அவரைக் கொட்டை, பீன்ஸ் கொட்டை, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, அக்ரோட்டுப் பருப்பு, வாதுமைப் பருப்பு முதலியவைகளிலும், தக்காளிப் பழம், வெங்காயம், காரட்கிழங்கு என்னும் மஞ்சள் முள்ளங்கிக் கிழங்கு, வசளைக் கீரை, பால், முட்டை, மீன் இறைச்சி முதலியவைகளிலும் இருக்கிறது.

அரிசி கோதுமை முதலிய தானியங்களில் இந்த பி. விட்டமின் இருக்கிறதென்று கூறினோம். தானியங்களிலுள்ள தவிடுகளில்தான் இந்த விட்டமின் உண்டு. நெல்லைக் குத்தினால் உமி வெளிப்படுகிறது. உமிக்குக் கீழே அரிசி இருக்கிறது. அரிசியின் மேலே மெல்லிய தோல் போன்ற பொருள் புரைபோல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரைக்குத் தவிடு என்று பெயர். இந்தத் தவிட்டில் தான் பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உண்டு. அரிசியில் தவிடு இருப்பது போலவே கோதுமையிலும் தவிடு உண்டு.