பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

229

ராகி என்னும் கேழ்வரகை உண்போரும் பருப்பு வகைகளையும் தயிரையும் தாராளமாகக் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உண்போரும் கேழ்வரகு சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். ஆனால், கேழ்வரகுடன் நெய் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம். நெய் சேர்க்காமல் கேழ்வரகு உண்பதனால் மலச்சிக்கலும் வயிற்றில் கோளாறும் ஏற்படும்.

சோறும் குழம்பும், தயிரும் உண்பதனால் மட்டும் அது நல்ல உணவாய்விடாது. சோற்றுடன் காய்கறி, கிழங்குகள், கீரை முதலிய வற்றைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். சோற்றைமட்டும் வயிற்றில் இறக்குவதற்காகச் சிறிது அளவு காய்கறியை உபயோகிப்பது கூடாது. உண்ணும் உணவில் பகுதி அளவு காய்கறி, கிழங்கு, கீரைகளாக அமைய வேண்டும். காய்கறிகளைச் சமைப்பதிலும், சாம்பாரிலும் நெய் அல்லது வெண்ணெய் போதுமான அளவு சேர்க்கவேண்டும். சோற்றுடன் நாள்தோறும் பாலும் தயிரும் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாமிசம் உண்போர் இறைச்சி, முட்டை, மீன் வகைகளை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை ஈரல் சேர்த்துக்கொள்வது நல்லது.

மாமிசம் உண்ணாதவர் காய்கறி கிழங்குகளையும், கீரை களையும் அதிகமாகச் சோத்துக்கொள்வதோடு, தினம் பாலையும், தயிரையும், நெய்யையும் சேர்த்துக் கொள்வது அவசியம். பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நூலில் கூறப்பட்டுள்ள உணவுப்பொருள்களையும் அவற்றில் உள்ள சத்துப்பொருள்களையும் கவனித்தால் எந்தெந்த உணவுப் பொருள்களைச் சேர்த்து உண்ணவேண்டுமென்பது விளங்கும். சாப்பாட்டில் இது இது உண்ணவேண்டும் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால், அவைகளைப் பெற வசதி வேண்டுமல்லவா? ஆகவே, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசதிக்கேற்றபடி தங்களுக்கு வேண்டிய உணவுகளைச் சமைத்துக்கொள்வார்களாக. உடம்பின் நலத்துக்கு வேண்டிய பொருள்கள் இன்னின்ன என்று மேலே கூறியுள்ளோம். அதைக் கவனித்து அதன்படி வசதிக் கேற்றாற்போல உணவு தயார் செய்து கொள்ளலாம்.