பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -19

ஒன்றையொன்று பற்றிக்கொண்டுள்ளன. ஆகையினாலே, உயிர் தூய்மையாக இல்லாமல் அழுக்கு (மலம்) படிந்து ஒளி மழுங்கிக் கிடக்கின்றது. தன்னிடமுள்ள அழுக்கை உயிர், தானே நீக்கிக்கொள்ள முடியாமலிருக்கிறது. கடவுள்தான் உயிரின் அழுக்கைப் போக்க வேண்டும். அழுக்காகிய பாசம் உயிர் அற்ற சடப்பொருள். சடப் பொருளாகிய பாசம் உயிரைப் பற்றிக்கொண்டு, அதன் ஒளியை மங்கச் செய்கிறது. இவற்றைச் சுருக்கமாக விளக்கிக் கூறுவோம்.

கடவுள் (பதி)

எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் நிறைந்த அன்பும், இன்பமும், தூய்மையும், ஆற்றலும் உடையவர். எங்கும் நிறைந்துள்ளவர். ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது, பிறப்பும் இறப்பும் இல்லாதவர். அவரை ஒருவரும் படைக்கவில்லை. அனாதி யாக இருக்கிறார். உயிர்களிடத்தில் படிந்துள்ள மாசுகளை நீக்கி, அவற்றைத் தூய்மைப்படுத்தி இன்பநிலையடையச் செய்கிறார். உயிர்களின்மேல் உள்ள பேரருளினாலே கடவுள் இதைச் செய்கிறார். இத்தொழிலைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துவிதமாகச் செய்கிறார்.

உயிர் (பசு)

எண்ணிறந்த உயிர்கள் உள. உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை. கடவுளைப்போலவே உயிர்களும் அனாதியாக உள்ளன. ஆனால், இவை கடவுளைப் போன்று தூய்மையாக இல்லை. தூய்மைகெட்டு மாசு படிந்து உள்ளன. செம்பில் களிம்புபோலவும், நெல்லில் உமி போலவும், உப்பில் நீர் போலவும் மாசானது அனாதியாகவே உயிர்களிடத்தில் படிந்து, அவற்றின் தூய்மையை மறைத்துக்கொண்டிருக்கிறது.

அழுக்கு (பாசம்)

உயிர்களிடத்தில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகள் (மலம்) படிந்துள்ளன. அழுக்குகளைக் கடவுள் உண்டாக்க வில்லை. கடவுளைப்போலவும் உயிர்களைப்போலவும் இந்த அழுக்குகளும் அனாதியாகவே இருக்கின்றன. இவை அறிவற்ற சடப் பொருள்கள். மேலே கூறியபடி இவை உயிர்களிடத்தில் படிந்து, அவற்றின் தூய்மையை மறைத்துக்கொண்டிருக்கின்றன. “ஆன்மாவினுடைய சிற்சத்தியானது, ஆற்றலும் விருத்தமுமாயிருக்கிற யாதொரு பொருளால்