100
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இலங்கையரசனான முதலாம் கஜபாகுவின் சம காலத்தவனான செங்குட்டுவன், கஜபாகுவுக்கு வயதில் மூத்தவனாக இருந்தான். இவன் தன்னுடைய 50ஆவது ஆட்சியாண்டில் ஏறக்குறைய கி.பி. 175 இல் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கருதலாம். அந்த ஆண்டுக்கு முன்பே இளஞ்சேரல் இறந்து போனான் என்று சிலம்பு கூறுகிறது. எத்தனை ஆண்டுக்கு முன்பு என்பது தெரியவில்லை. ஏறத்தாழக் கி. பி. 170இல் இறந்து போனான் என்று கொள்ளலாம். இவன் பதினாறு ஆண்டு ஆட்சி செய்தான் என்பதனால், உத்தேசம் (17016=154) கி. பி. 154 முதல் 170 வரையில் இவன் ஆட்சி செய்தான் என்று கருதலாம்.
குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையின் சம காலத்திலிருந்த அரசர்கள், சேர நாட்டில் சேரன் செங்குட்டுவனும் பாண்டி நாட்டில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் (வெற்றிவேற் செழியன்) இருந்தார்கள். சோழ நாட்டில் சோழன் பெரும்பூண் சென்னி (பெருஞ்சோழன்) இருந்தான்.
ஒரு விளக்கம்
பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனும் கொங்கு நாட்டின் அரசனுமாகிய இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறையின் மகன். இவனை ( தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் என்று கருதுவது தவறு. இந்தத் தவறான கருத்தைச் சரித்திரகாரர் பலருங் கொண்டிருந்தார்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இவன் என்று கே. என். சிவராசப் பிள்ளையவர்களும்[1] கே. ஜி. சேஷையரும்[2] கருதினார்கள். மு. இராகவையங்கார் அவர்கள் தம்முடைய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறே தவறாக எழுதியுள்ளார். மேற்படி நூலில் சேர வமிசத்தோர் என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்பொறையின் இராணியின் பெயர் அந்துவஞ்செள்ளை என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் இவர் எழுதியுள்ளார். இவர் கூறியதையே வி. ஆர். இராமச்சந்திரதீட்சிதரும் கூறியுள்ளார். (தீட்சிதர் அவர்கள் மு. இராகவையங்காரின் துணைகொண்டு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.) அவர், தம்முடைய சிலப்பதிகார ஆங்கில மொழிப்பெயர்ப்பின், முகவுரையில் 13ஆம் பக்கத்தில் ‘சேரர் தாய்வழிப் பட்டியல்’ என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்-