118
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
என்றும் பாடியுள்ளார். செங்கண் சோழனையும், கொங்கு நாட்டுப் பொறையனையும் சேரமான் கோக்கோதை மார்பனையும் பாடிய இந்தப் பொய்கையார், திருமாலையோ அல்லது வேறு கடவுளையோ பாடியதாக ஒரு செய்யுளேனும் கிடைக்கவில்லை.
எனவே, மனிதரை (அரசரைப்) பாடிக்கொண்டிருந்த பொய்கையாரும், மானிடரைப் பாடாமல் திருமாலையே பாடிக்கொண்டிருந்த பொய்கையாழ்வாரும் ஒருவராவரோ? வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு பொய்கையார்கள் எப்படி ஒரே பொய்கையார் ஆவர்? பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா? எனவே, பொய்கையார் வேறு பொய்கையாழ்வார் வேறு என்பது நன்றாகத் தெரிகிறது.
இனி டிவி. மகாலிங்கம் கூறுவதை ஆராய்வோம். தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ அரசர் மரபைச் சேர்ந்த சிம்மவர்மனுடைய மகனான சிம்மவிஷ்ணுவின் காலத்தில், புறநானூற்றிலும் களவழி நாற்பதிலுங் கூறப்பட்ட செங்கணான் இருந்தான் என்று இவர் எழுதுகிறார்.[1] சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் போருக்குச் சென்ற போது அவனை எதிர்த்தவன் செங்கட் சோழன் என்று கூறுகிறார். செங்கட் சோழனும் சிம்விஷ்ணுவும் 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்றும், செங்கணான் சேரனை (கணைக்காலிரும்பொறையை) வென்ற பிறகு அவனுடைய கடைசிக் காலத்தில் சிம்மவிஷ்ணு செங்கணானை வென்றான் என்றும் எழுதுகிறார்.[2] இவர் கூறுவது இவருடைய ஊகமும் கற்பனையும் ஆகும். பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வென்றான் என்றும் பல்லவரின் பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறது (சுலோகம் 5). சிம்மவிஷ்ணு இன்னொரு சிம்மவிஷ்ணு என்பவனை வென்றான் என்று அதே சாசனம் (சுலோகம் 4) கூறுகிறது. இதிலிருந்து சோழ நாட்டையரசாண்ட சிம்மவிஷ்ணுவைத் தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆனால், மகாலிங்கம், பல்லவ சிம்மவிஷ்ணு, சோழன் செங்கணானுடன் போர் செய்து சோழ நாட்டை வென்றான் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? சாசனம் கூறுகிற பெயரை மாற்றி இவர் தம் மனம் போனபடி கூறுவது ஏற்கத்தக்கதன்று.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டையரசாண்டவர் களப்பிர அரசர்கள். களப்பிரருக்குக் கீழ்ச் சோழ அரசர் அக்காலத்தில் சிற்றரசராக இருந்தார்கள். ஆகவே, சுதந்தரமும் ஆற்றலும் படைத் திருந்த செங்கட் சோழன், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கிச்