பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


வடக்கிலிருந்து (பட்டினி நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவன் மீது இவர் கையறுநிலை பாடினார். அந்தச் செய்யுள் புறநானூற்றில் 219 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

கொல்லிக் கண்ணனார்

கண்ணன் என்பது இவருடைய பெயர். கொல்லி என்பது இவருடைய ஊர்ப்பெயர். கொல்லி என்னும் ஊரும் கொல்லி மலைகளும் கொல்லிக் கூற்றத்தில் இருந்தன. ஓரி என்னும் அரசன் கொல்லிக் கூற்றத்தை யரசாண்டான் என்றும் பெருஞ்சேரல் இரும்பொறை அவனை வென்று அவனுடைய நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்றும் அறிந்தோம். கொல்லிக் கண்ணனார், கொல்லிக் கூற்றத்துக் கொல்லி என்னும் ஊரிலிருந்தவர் என்பது தெரிகிறது.

இந்தப் புலவரைப் பற்றிய வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. இவர் பாடிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 34ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. மருதத்திணையைப் பற்றிய இந்தச் செய்யுளில் ‘குட்டுவன் மாந்தை’யைக் கூறுகிறார். மாந்தை என்பது கொங்குச் சேரருக்குரிய மேற்குக் கரையிலிருந்த துறைமுகப்பட்டினம். குட்டுவன் என்னும் பெயருள்ள அரசர் பலர் இருந்தனர். அவர்களில் இவர் கூறுகிற குட்டுவன் யார் என்பது தெரியவில்லை.

சேரமான் கணைக்காலிரும்பொறை

கொங்கு நாட்டையாண்ட இவன் கொங்குச் சேரரின் கடைசி அரசன் என்று கருதப்படுகிறான். இவன் புலவனாகவும் திகழ்ந்தான். இவன் பாடிய செய்யுள் புறநானூற்றில் 74ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுளை இவனுடைய வரலாற்றுப் பகுதியில் காண்க.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் இவரைக் கூறுவர். கொங்கு நாட்டுச் சேரர்களில் கடுங்கோ என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். செல்வக்கடுங்கோ (வாழியாதன்), மாந்தரன் பொறையன் கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று சிலர் இருந்தனர். கடுங்கோ என்பது இவருடைய பெயர். இவருக்குப்பிறகு இளங்கடுங்கோ ஒருவர் இருந்தார். பாலைத் திணையைப்