பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



“உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை யிரவினும் இளிவெனச் சொல்லிய வன்மைத் தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி”
(குறுந். 283: 1-4)

இது எல்லோரும் கொள்ளவேண்டிய பொன்மொழி யன்றோ?

திருவிழாவின்போது உயரமான கம்பத்தில் இராத்திரியில் பல விளக்குகளை ஏற்றிவைப்பது அக்காலத்து வழக்கம். இந்தக் கம்ப விளக்கை, மலைமேல் வளர்ந்த இலையுயர்ந்த இலவ மரம் செந்நிறப் பூக்களுடன் திகழ்வது போல இருக்கிறது என்று உவமை கூறியிருப்பது இயற்கையான உண்மையைத் தெரிவிக்கின்றது.

“அருவி யான்ற வுயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில மலர்ந்த இலவம்”
(அகம்.185:10-12)

நம்பியும் நங்கையும் காதலரானார்கள். நங்கை நம்பியுடன் புறப்பட்டு அவனுடைய ஊருக்குப் போய்விட்டாள். அவள் போய்விட்டதை யறிந்த செவிலித்தாய் அவளைத் தேடிப் பின் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. தொடர்ந்து நெடுந்தூரஞ் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. ஆனால், துறவிகள் சிலர், அவ்வழியாக வந்தவர் எதிர்ப்பட்டனர். அவர்களை அவ்வன்னை ‘நம்பியும் நங்கையும் போவதை வழியில் கண்டீர்களோ’ என்று வினவினாள். அவர்கள், நங்கையின் அன்னை இவள் என்பதையறிந்தனர். அவர்கள் அன்னைக்குக் கூறினார்கள்: ‘ஆம், கண்டோம். நீர் மனம் வருத்த வேண்டா. நங்கை நம்பியுடன் கூடி வாழ்வதுதான் உலகியல் அறம். அந்த நங்கை நம்பிக்குப் பயன்படுவாளே தவிர உமக்குப் பயன்படாள். மலையில் வளர்ந்த சந்தனமரம் மலைக்குப் பயன்படாது: கடலில் உண்டாகும் முத்து கடலுக்குப் பயன்படாது; யாழில் உண்டாகிற இன்னிசை வாசிப்பவருக் கல்லாமல் யாழுக்குப் பயன்படாது. உம்முடைய மகளும் உமக்கு அப்படித்தான்’ என்று கூறி அன்னையின் கவலையைப் போக்கினார்கள் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ உலகியல் அறத்தை அழகும் இனிமையும் உண்மையும் விளங்கக் கூறுகிறார். அவை:

“புலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?