166
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இவருக்குப் பெயராக வழங்கியது. இவருடைய சொந்தப் பெயர் தெரியவில்லை. இவரைப் பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுவது தவறு. அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூர்க் கோட்டையைப் பெருஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்டுப் போர் செய்த காலத்தில் பொன்முடியார் அந்தப் போர்க்களத்தை நேரில் கண்டவர். அரிசில்கிழார் என்னும் புலவரும் அந்தப் போர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர். இவர்கள் காலத்திலே, அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஔவையாரும் இருந்தார். எனவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தில் இருந்தவர்கள். பொன்முடியாரின் வரலாறு தெரியவில்லை. இப்புலவருடைய பாடல்கள் புறநானூற்றிலும் தகடூர் யாத்திரையிலும் தொகுக்கப்பட்டுள்ளன.
புறநானூறு 299, 310, 312ஆம் பாட்டுகள் இவர் பாடியவை. இவை முறையே குதிரைமறம், நூழிலாட்டு, மூதின்முல்லை என்னுந் துறைகளைக் கூறுகின்றன. இவர் பாடிய “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று தொடங்கும் மூதின்முல்லைத் துறைச் செய்யுள் (புறம். 312) பலரும் அறிந்ததே.
தகடூர்ப் போர் நிகழ்ச்சியைக் கூறுகிற தகடூர் யாத்திரை என்னும் நூலில் பொன்முடியாரின் பாட்டுகளும் தொகுக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்நூல் இப்போது மறைந்துபோன படியால் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அந்த நூற் செய்யுட்கள் சில புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொன் முடியாருடைய செய்யுட்கள் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ என்னுந் தொடக்கத்து 8ஆம் சூத்திரத்தில் ‘வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையானும்’ என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார், ‘கார்த்தரும்’ எனத் தொடங்கும் பாட்டை மேற்கோள் காட்டி (புறத்திரட்டு 1369ஆம் செய்யுள்) “இது பொன்முடியார் ஆங்கவனைக் (?) கண்டு கூறியது” என்று எழுதியுள்ளார்.
புறத்திணையியலில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ எனத் தொடங்கும் 12ஆம் சூத்திரத்தின் ‘தொல் எயிற்கு இவர்தலும் என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் (பக்கம் 11 - 12) ‘மறனுடைய மறவர்’ என்று தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டி ‘இது பொன்முடியார் பாட்டு என்று எழுதுகிறார்.