20. கொங்கு நாட்டுப்
பிராமி எழுத்துச் சாசனங்கள்
அரசலூர்
கோயம்புத்தூர் மாவட்டத்து ஈரோடு தாலுகாவில் உள்ளது அரசலூர். இது ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்குள்ள மலைக்கு நாகமலை என்றும் அரசலூர் மலையென்றும் பெயர் உண்டு. இந்த மலையில் தரை மட்டத்திலிருந்து அறுபதடி உயரத்தில் ஆண்டிப்பாறை என்னுங் குகையும் அக்குகையில் கற்படுக்கைகளும் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. கல்வெட்டெழுத்துக்களில் ஒன்று பிராமி எழுத்து. மற்ற இரண்டு வட்டெழுத்து. இங்கு நம்முடைய ஆய்வுக்குரியது பிராமி எழுத்து மட்டுமே.
இங்குக் கல்வெட்டெழுத்துக்கள் இருப்பதை 1961ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி, ஈரோடு புலவர் செ. இராசு மற்றுஞ் சில நண்பர்கள் சென்று கண்டு, இவ்வெழுத்துக்களைக் காகிதத்தில் மைப்படி எடுத்துச் சுதேசமித்திரன்[1], செந்தமிழ்ச் செல்வி பத்திரிக்கைகளில் வெளியிட்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த விவரம் தெரிந்தபிறகு அரசாங்கத்து எபிகிராபி இலாகா இம்மலைக்குச் சென்று இந்தச் சாசனங்களைக் கண்டு 1961-62 ஆண்டு அறிக்கையில் வெளியிட்டது[2]. இந்த இலாகாவின் 1961 - 62ஆம் ஆண்டின் 280-282 எண்களுள்ள சாசன எழுத்துகளாக இந்த கல்வெட்டெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எபிகிராபி இலாகாவின் 1963-64ஆம் ஆண்டின் 4362- 4364ஆம் எண்ணுள்ள போட்டோ (நிழற்பட) நெகிடிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தை (280 of 1961 -62) ஆராய்வோம். இந்தப் பிராமி எழுத்துக்கள் இரண்டு வரிகளாக எழுதப்பட்டுள்ளன. முதல்வரியில் பதினான்கு எழுத்துகளும் இரண்டாவது வரியில் பதிமூன்று எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை எபிகிராபி இலாகா இவ்வாறு படித்திருக்கிறது: