பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடைய முடியாது. தமிழ் நாட்டின் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரையும் தொடர்ந்து முழுமையாக எழுதப்படாதது போலவே கொங்கு நாட்டின் சரித்திரமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இதுவரையில் எழுதப்படவில்லை. அங்கும் இங்குமாகச் சில சரித்திரப் பகுதிகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவ்வளவுதான். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தமிழகத்தின் வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. சங்ககாலத்துத் தமிழகம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பவை, துளு நாடு, அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேர நாட்டுக்கு வடக்கே இருந்தது. இப்போது அது தென் கன்னட வட கன்னட மாவட்டங்களில் அடங்கி மைசூர் (கன்னட) தேசத்தில் சேர்ந்து இருக்கிறது. துளு நாட்டுக்குத் தெற்கே அரபிக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேரநாடு இருக்கிறது. பழைய சேர நாடு இப்போது மலையாள நாடாக மாறிக் கேரள இராச்சியமாக அமைந்திருக்கிறது. துளு நாடும் சேரநாடும் பிற்காலத்தில் தமிழகத்திலிருந்து தனியாகப் பிரிந்து போய்விட்டன. பாண்டி நாடு தமிழகத்தின் தெற்கே, வங்காளக்குடாக் கடல், இந்துமா கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களுக்கிடையே இருக்கிறது. பாண்டி நாட்டுக்கு வடக்கே, வங்காளக்குடாக் கடல் ஓரமாகச் சோழநாடு இருக்கிறது. சோழ நாட்டுக்கு வடக்கே வங்காளக்குடாக் கடலையடுத்துத் தொண்டை நாடு இருக்கிறது. தொண்டை நாடு வடபெண்ணை ஆறு வரையில் இருந்தது. இவ்வாறு துளுநாடும் சேரநாடும் பாண்டிய நாடும் சோழநாடும் தொண்டை நாடும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன. ஆறாவது பிரிவாகிய கொங்கு நாடு கடற்கரை