பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
19
இல்லாத உள் நாடு. அது இப்போதைய பழனிமலை வட்டாரத்திலிருந்து வடக்கே கன்னட நாட்டில் பாய்கிற காவிரி ஆறு வரையில் (ஸ்ரீரங்கப்பட்டணம் வரையில் பரந்திருந்தது, அதனுடைய மேற்கு எல்லை, மேற்குத் தொடர்ச்சி மலைகள். கிழக்கு எல்லை, சோழ தொண்டை நாடுகளின் மேற்கு எல்லைகள். சங்க காலத்திலே பெரிய நிலப்பரப்பாக இருந்த கொங்கு நாடு பிற்காலத்திலே குறைந்து குறுகிவிட்டது.
சங்க காலத்திலே, பெரிய பரப்புள்ளதாக இருந்த கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர்கள் அரசாண்டார்கள். சேர, சோழ, பாண்டியரைப்போல முடிதரித்து அரசாண்ட பெருமன்னர் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இல்லை. சிறுசிறு ஊர்களைச் சிற்றரசர் பலர் அரசாண்டு வந்தனர். அந்தச் சிற்றரசர்களை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாளச் சேரரும் பாண்டியரும் சோழரும் முயன்றார்கள். ஆகவே, சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே பல போர்கள் நடந்தன. கடைசியில், சேர அரசர் கொங்கு நாட்டில் கால் ஊன்றினார்கள். பிறகு அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொங்கு இராச்சியத்தை யமைத்து அரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட சேரர், இளையகால் வழியினரான பொறையர். அவர்களுக்கு இரும்பொறை என்றும் பெயர் உண்டு. மூத்தக் கால் வழியினரான சேரர் சேர நாட்டையும், இளைய கால் வழியினரான பொறையர் கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் சேர நாட்டையாண்ட சேர அரசரே கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள் என்று தவறாகக் கருதிகொண்டு அவ்வாறே சரித்திரம் எழுதியுள்ளனர். அவர் கூற்று தவறானது. ஒரே குலத்தைச் சேர்ந்த மூத்த வழி, இளைய வழியினராக இருந்தாலும், சேர நாட்டையாண்ட சேர அரசர் வேறு, கொங்கு நாட்டை யரசாண்ட பொறைய அரசர் வேறு.
கொங்கு நாட்டு வரலாற்றின் சரித்திரக் காலம், இப்போது கிடைத்துள்ள வரையில், ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிறது. கி. பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிற கொங்கு நாட்டுச் சரித்திரம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் (ஏறத்தாழ கி. பி. 250இல்) முடிகிறது. அதாவது, தமிழ்நாடு களப்பிர அரசருக்குக் கீழடங்கியபோது கொங்கு நாட்டுச் சரித்திரத்தின் பழைய வரலாறு முடிவடைகிறது.