பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

221


காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், போதிமங்கை முதலிய இடங்களில் பௌத்தப் பள்ளிகளும் பௌத்த விகாரைகளும் இருந்தன. ஆகவே பௌத்த நாடாகிய இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதும், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'இலங்கைக்குச் செல்வதும் வழக்கமாயிருந்தது. அன்றியும் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், அடிக்கடி தமிழ்நாட்டு அரசர்களின் துணையை நாடினார்கள். ஆகவே, சமயச்சார்பாகவும் அரசியல் சார்பாகவும் தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

இலங்கை வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் என்னும்நூலின் பிற்பகுதியாகிய சுல்லவம்சம் என்னும் நூலின் 44 ஆம் அதிகாரத்திலிருந்து இந்தக் காலத்து அரசியல் நிலையை அறியலாம். அதனைக் கூறுவோம். மகேந்திர வர்மன் காலத்தில் இலங்கைத் தீவின் அரசியல் நிலை, மிகக் குழப்பமான நிலையில் இருந்தது. அரச பதவிக்காகச் சிலர், அடிக்கடி கலகம் உண்டாக்கியும் போர் செய்தும் வந்தபடியினாலே நாட்டில் அமைதி நிலவவில்லை. ஏறக்குறைய கி. பி. 500 முதல் 630 வரையில், அஸதாவது மகேந்திரவர்மன் பல்லவ நாட்டை அரசாண்ட அதே காலத்தில் அக்கபோதி, ஜேட்டதிஸ்ஸன், தாட்டோபதிஸ்ஸன், கஸ்ஸபன் என்னும் நான்கு அரசர்கள் இலங்கைத் தீவின் அரசாட்சிக் காகப் பல முறை போர் செய்தார்கள். இவர்களைப்பற்றிய வரலாறு இது:

இரண்டாம் அக்கபோதி: இவன் ஏறக்குறைய கி. பி. 601 முதல் 611 வரையில் அரசாண்டான். இவன் முதலாம் அக்கபோதியின் மகன். இவனைக் குட்ட ராசன் என்றும் குட்ட அக்கபோதி என்றும் கூறுவர். (குட்ட என்றால் இளைய என்பது பொருள்.) இவன், சங்கபத்திரை என்பவளை மணஞ் செய்திருந்தான்.

இவன் காலத்தில் கலிங்கநாட்டு அரசன் அரசு துறந்து தன் மனைவியுடனும் அமைச்சனுடனும் இலங்கைக்கு வந்து, தூபராம விகாரையின் தலைவராக இருந்த ஜோதிபாலர் என்னும் பௌத்தபிக்கு விடத்தில் துறவு பூண்டான். இவர்களை அக்கபோதியும் சங்கபத்திரையும் போற்றி வந்தனர். (கலிங்கமன்னன் அரசு துறந்து இலங்கைக்கு வந்ததன் காரணம், சளுக்கிய அரசன் புலிகேசி இவனுடன் போர் செய்து இவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதனால் என்று கருதப்படுகிறது.)