பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

223



இரண்டாம்அக்கபோதி காலஞ்சென்ற பிறகு, சங்க திஸ்ஸன் என்பவன் அரசனானான். இவன் ஏறக்குறைய கி. பி. 611 முதல் 617 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் உரோகண நாட்டில் இருந்த மொக்கல்லானன் என்பவன் அரசபதவிக்காக இவனுடன் போர் செய்தான். இருவருக்கும் போர் நடக்கும்போது, சங்கதிஸ்ஸனுடைய சேனாபதி சங்கதிஸ்ஸனையே எதிர்த்துப் போரிட்டான். இரண்டு சேனைகளுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட சங்கதிஸ்ஸன் போர்க் களத்தில் போராடியபோது, அவனுடைய பட்டத்து யானை ஒரு மர நிழலை நாடிச்சென்றது. அப்போதுமரக்கிளை தடுத்தபடியினாலே அரசனுடைய கொற்றக்குடை கீழே விழுந்துவிட்டது. அக்குடையை மொக்கல்லானனுடைய வீரர்கள் கொண்டுபோய் மொக்கல்லானனிடம் கொடுத்தார்கள். அவன் குன்றின்மேல் ஏறி நின்று அக்குடையை உயர்த்தினான். அது கண்ட சங்கதிஸ்ஸனுடைய சேனைகள் மொக்கல்லானன் வெற்றி பெற்றதாக நினைத்து அவனிடம் போய்விட்டார்கள். இவ்வாறு தனக்குத் தோல்வி ஏற்பட்டதைக் கண்ட சங்கதிஸ்ஸன் தன் மகனுடன் அருகில் இருந்த காட்டினுள் ஓடி ஒளிந்தான்.

வெற்றிபெற்ற மொக்கல்லானன், இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் மொக்கல்லானன் என்றும் தல்ல மொக்கல்லானன் என்றும் கூறுவர். இவன் 6 ஆண்டு அரசாண்டான். தோல்வியுற்றுக் காட்டிற்கு ஓடிய சங்கதிஸ்ஸனும் அவன் மகனும் பௌத்தபிக்குகளைப் போல வேடம் பூண்டு உரோகண நாட்டிற்குப் போனார்கள். போகும் வழியில் இவர்கள், மொக்கல்லானன் ஆட்களால் அடையாளம் கண்டறியப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு இறந்த சங்கதிஸ்ஸ னுடைய இன்னொரு மகன் ஜேட்ட திஸ்ஸன் என்பவன், மலைய நாட்டில் சென்று மறைந்திருந்தான்.

மொக்கல்லானனுடைய சேனாபதி சிலாமேகவண்ணன் என்பவன். இவன் அரசனைப் பகைத்து உரோகண நாட்டிற்குப் போய்ச் சேனை யொன்றைச்சேர்த்துக்கொண்டு, மலைய நாட்டில் மறைந்திருந்த ஜேட்டதிஸ்ஸனுடன் (இவன் சங்கதிஸ்ஸனுடைய மகன்) நட்புக் கொண்டு அரசனாகிய மொக்கல்லானன் மேல் படையெடுத்துச் சென்றான். மொக்கல்லானன் சிலாமேகவண்ணனைப் போர்க்களத்தில் எதிர்த்தான். ஆனால் போரில் தோற்று ஓடினான். அவனைச் சிலாமேகவண்ணன் சீயகிரிக்கு அருகில் கொன்றான்.