பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சமயநிலை

1. சமண சாக்கிய மதங்கள்

மகேந்திரவர்மன் காலத்திலே தமிழ்நாட்டிலே சமண சமயமும் சாக்கிய மதமும் செழித்திருந்தன. சமண சமயம் என்பது, ஆருகத மதம்; அஃதாவது ஜைன சமயம். சாக்கிய மதம் என்பது, பௌத்த சமயம். இந்த இரண்டு சமயங்களும் சேர சோழ பாண்டியநாடு என்னும் மூன்று தமிழ்நாடுகளிலும் பரவி நிலை கொண்டிருந்தன. இந்த மதங்களை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். சமணருடைய பள்ளிகளும் பாழிகளும், பௌத்தருடைய பள்ளிகளும் விகாரைகளும் நாடெங்கும் ஊரெங்கும் நிறைந்திருந்தன. சமணத் துறவிகளும் பௌத்தப் பிக்குகளும் எங்கும் நிறைந்திருந்தனர். இந்த நிலையைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ஞானசம்பந்தருடைய தந்தையாராகிய சிவபாத விருதயர், நாட்டில் சைவம் குன்றியிருந்ததையும் சமண சாக்கியம் பெருகியிருந்ததையும் கண்டு மனம் வருந்தினர் என்று சேக்கிழார் இவ்வாறு கூறுகிறார்: -


“மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம் அருகியான் அடியார்பால்
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறு தொழியக்கண்டு
ஏதமில்சீர்ச் சிவபாத இரு தயர்தாம் இடருழந்தார்.”

(திருஞான - கஅ.)

சிவபாதவிருதயர் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தவர். ஆனால், ஞானசம்பந்தர் இவருக்கு மகனாக இன்னும் பிறக்கவில்லை. நாவுக்கரசரும் இக்காலத்தில் இருந்தவராவர். தொண்டைநாட்டையும் சோழநாட்டையும் அரசாண்ட மகேந்திவர்மனே சமண சமயத்ததவனாக இருந்தான். பிற்காலத்தில் இவன் நாவுக்கரசரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டான்.

இவ்வாறே பாண்டியநாட்டிலும் சமணசமயம் பெருகிச் சைவ சமயம் குன்றியிருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார் :-