பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


4. திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் இருந்த புகழனார், மாதினியார் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். சைவசமயத்திலே பிறந்த இவர் இளமையில் கல்வியை நன்குகற்றுத் தேர்ந்தார் வாலிபப் பருவத்திலே பெற்றோரை இழந்தார். உண்மைச் சமயம் எது என்பதையறிய ஆவல் கொண்டு பல சமயக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்தார். அக்காலத்தில் பாடலிபுரம்1 என்னும் இடத்தில் இருந்த, பேர்போன சமண மடத்தில் சேர்ந்து சமண சமய நூல்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்தார்.

இவருடைய சமய அறிவையும் கல்வி அறிவையும் கண்ட சமணர்கள் இவரைத் தம் மதகுருவாக அமைத்துத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துப் போற்றினார்கள். தருமசேனர் பாடலிபுரத்துப் பள்ளியிலே சமண சமயத் தலைவராக இருந்தார். நெடுங்காலம் சமண குருவாக இருந்து தமது வாழ்நாளின் பெரும்பாகத்தை அங்கே கழித்தார்.

தருமசேனருடைய முதுமைப்பருவத்தில் இவருக்குக் கொடிய சூலைநோய் கண்டது. அந்நோய் நாளுக்கு நாள் கடுமையாக இருந்தது. மணி மந்திர மருந்துகளினாலும் இவருடைய சூலைநோய் தீரவில்லை. நோயின் துன்பத்தை இவர் தமது திருவதிகைப் பதிகத்தில் நன்கு விளக்கிக் கூறுகிறார். “தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்,” என்றும், “சுடுகின்றது சூலை” என்றும், “பயந்தே யென்வயிற்றினகம்படியே பறித்துப் புரட்டி யறுத்து ஈர்த்திட நான் அயர்ந்தேன்” என்றும், “கலித்தே யென் வயிற்றி னகம் படியே கலக்கிமலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்தேன்” என்றும் இவர் கூறுவதிலிருந்து இந்நோயின் கொடுமையை நன்கறியலாம்.


[1]

  1. 1. பாடலிபுரம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இங்கிருந்த சமணப் பள்ளி அக்காலத்தில் பேர்போன மடமாக இருந்தது. இந்தச் சமணப் பள்ளியில் தான் லோகவிபாகம் என்னும் நூலைச் சர்வநந்தி என்பவர் சக ஆண்டு 380 இல் எழுதி முடித்தார். அஃதாவது கி. பி. 458 இல் சிம்மவர்மன் என்னும் பல்லவமன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த காலத்தில் அவ்வரசனுடைய 22 ஆவது ஆட்சி ஆண்டில் லோகவிபாகம் பாகத மொழியிலிருந்து வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. (Mys. Arhl. Rep. 1909-10, Para. 112) அதாவது நாவுக்கரசர் பிறப்பதற்கு 160 ஆண்டுகளுக்கு முன்னே இந்நூல் இந்தப் பள்ளியில் மொழி பெயர்க்கப்பட்டது.