பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


இது அவரே கூறிய அகச்சான்று ஆகையால், “காரைக்கா லம்மையார் பெண்பாலார் அல்லர்; ஆண் மகன். அவர் பெண்ணாக இருந்தால் கணவனையும் மக்களையும் என்று கூறியிருப்பார். அப்படிக் கூறாமல் மனையாளையும் மக்களையும் என்று கூறியபடியால் காரைக்கால் அம்மையார் ஆண்மகனே" என்று ஓர் ஆராய்ச்சியாளர் கிளம்புவாரானால் எப்படியிருக்கும்! ஆகவே கவி மரபாகவோ அன்றி வழுவமை தியாகவோ கவிஞர்கள் கூறிய செய்திகளைப் பகுத்தறிவுகொண்டும் ஏனைய சான்று கொண்டும் ஆராயாமல் மனம்போனவாறு கூறத் துணிவது உண்மைக்கு மாறுபட்ட தவறான முடிபாகும். நிற்க.

சமணசமயத் தலைவராக இருந்தபோது தருமசேனர் என்று பெயர் பெற்றிருந்த மருணீக்கியார், சைவசமயத்தில் சேர்ந்தபோது நாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார் என்று கூறினோம். பிற்காலத்திலே இவருடன் சேர்ந்து சைவ சமயத்தைப் பரப்பிய இவருக்கு மிக இளையரான ஞானசம்பந்தர், இவரை முதன்முதல் கண்டபோதும் அதன் பிறகும் இவரை “அப்பரே” என்று அழைத்தார். அதாவது தந்தை போன்ற பெரியவர் என்பது பொருள். ஆகவே, சம்பந்தர் காலத்தில் நாவுக்கரசர் மிக்க வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பது இதனால் தெரிகிறது.

5. மகேந்திரன் சைவனானது

நாவுக்கரசர், சமணசமயத்தவனாக இருந்த மகேந்திர வர்மனைச் சைவசமயத்தில் சேர்த்தார் என்று கூறுவர். இதற்குப் பெரியபுராணச் செய்யுள் ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால், பெரியபுராணம் மகேந்திரன் பெயரைக் கூறவில்லை; பல்லவ அரசர்களின் பொதுப் பெயராகிய காடவன், பல்லவன் என்னும் பெயர்களை மட்டும் கூறுகிறது காடவ அரசன் சைவசமயத்தைச் சேர்ந்தபிறகு பாடலிபுரத்தி லிருந்த சமணப் பள்ளியை, (அப்பர் தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த அதே சமணப் பள்ளியை) இடித்து அந்தக் கற்களைக் கொண்டுபோய் திருவதிகைச் சிவன் கோயிலிலே குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது.


"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித் துககொணர்ந்து குணதாவீச் சரம்எடுத்தான்.”