பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
239
திரு. வி. வெங்கையா அவர்கள் கொண்ட முடிவைச் சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மகேந்திர வர்மனும் நாவுக்கரசரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.[1]
தமது முதிர்ந்த வயதிலே, சமணசமயமும் பௌத்த மதமும் வலிமை பெற்று இருந்த காலத்திலே, தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப்பிரயாணஞ் செய்து பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் வளர்த்துப் பரப்பிய முதல் சமயகுரவர் திருநாவுக்கரசரே. ஏனைய சமயங்களின் ஆதிக்கம் வலுப்பட்டிருந்த காலத்திலே, தளர்ந்த வயதிலும் அஞ்சாமல் சென்று பரப்பி மற்றவர்களுக்கு வழிகாட்டிய பெருமை நாவுக்கரசருக்கேயுரியது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகச் சமயப் பிரசாரம் செய்தபிறகு இவருக்குத் துணையாக ஞான சம்பந்தர் தோன்றினார்.
6.அப்பரின் சமயப் பற்று
திருநாவுக்கரசர் சைவசமயத்தில் திண்மையான பற்றும் அழுத்த மான உறுதியும் கொண்டிருந்தார். இந்த உறுதி இவரிடத்தில் மேன் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. இந்த உறுதியை இவர் தமது திருப்பாக்களில் ஆங்காங்கே கூறியுள்ளார். அவற்றில் சில வருமாறு:
“பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் டகன்பன் திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன் மொய்கழலே.”
“மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்ா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.”
- ↑ 1. முதல் மகேந்திரவர்மனுடைய பேரனான இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்று ஒரு ஆசிரியர் கூறுகிறார். (Studies in South Indian Jainism. P. 66 by M. S. Ramaswami Aiyengar.) இந்தக் கருத்தைச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்பது எந்தவிதத்திலும் பொருந்தவில்லை. ஆகவே, இக்கருத்து தவறானது. நாவுக்கரசர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலே இருந்தவர் என்பதுதான் ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.