242
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
சீமாட்டியை மணஞ்செய்து கொண்டு வர்த்தகத்தொழில் செய்துவந்தார். இவ்வாறு வாழ்ந்துவந்த முகம்மது, தமது நாற்பதாவது வயதில் கடவுளின் திருவருள் கிடைக்கப்பெற்றார். கடவுளின் திருவருள் முழுவதும் கிடைக்கப்பெற்ற முகம்மது நபி (கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி) என்று போற்றப் பெற்றார். ஆகவே இவர் முகம்மதுநபி என்றும், நபி நாயகம் என்றும் அழைக்கப்பெற்றார். இவர் கண்ட சமயத்துக்கு இஸ்லாம் என்பது பெயர். இஸ்லாம் சமயத்தின் வேதத்துக்குக் குர்ஆன் என்பது பெயர். குர்ஆன் வேதம் அரபிமொழியில் எழுதப்பட்டது.
முகம்மதுநபி தாம் கண்ட புதிய இஸ்லாம் சமயத்தை மெக்கா நகரத்து மக்களுக்குப் போதித்தார். அவர்களில் சிலர் இவர் மதத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பலர் பழைய கொள்கையைவிடாமல் இவரைப் பகைத்தார்கள். பகைத்து இவரைக் கொல்லவும் சூழ்ச்சிசெய்தார்கள். அவர்களின் கொடிய எண்ணத்தை அறிந்த நபிநாயகம் அவர்கள், ஒருவரு மறியாமல் மெக்காவைவிட்டு மதீனா என்னும் நகரத்திற்குப் போய் விட்டார். இவ்வாறு மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் போனதை முஸ்லிம்கள் ஹிஜ்ரா என்று கூறுவர். ஹிஜ்ரா கி.பி.622 இல் ஏற்பட்டது.
முகம்மது நபி தமது இஸ்லாம் மதத்தை மக்களுக்குப் போதித்தார். அதனால் பகைமையுண்டாகித் தம்மை எதிர்த்தவர்களுடன் போர் செய்து அவர்களை வென்றார். இவர் காலத்திலேயே இவருடைய மதம் அரபு நாடு முழுவதும் பரவிவிட்டது. நபிநாயகம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மதகுருவாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவர் கி.பி.632 ஆம் ஆண்டில் ஜூன் திங்கள் 7 ஆம் நாள் காலமானார்.
மகேந்திரவர்மனும், திருநாவுக்கரசரும் வாழ்ந்திருந்த அதே காலத்தில், உலகப் பெரியார்களில் ஒருவராகிய முகம்மது நபி அவர்களும் வாழ்ந்திருந்தார். ஆகையினாலே, கால ஒற்றுமையைக் கருதி அவரைப்பற்றி ஈண்டுக் குறிப்பிடவேண்டியதாயிற்று.