பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


யெடுத்து வந்ததையும் மாமல்லன் மறக்கவில்லை. பல்லவரின் பிறவிப் பகைவனாய் அடிக்கடி பல்லவ அரசருடன் போர்தொடுக்கிற புலிகேசியை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் எண்ணம் இவனுக்கு உண்டாயிற்று. இதற்காக இவன் சமயம் பார்த்திருந்தான். தக்க சமயமும் வாய்த்தது. புலிகேசி, நரசிம்மவர்மன் மேல் மீண்டும் படையெடுத்து வந்தான்.அப்போது நரசிம்மவர்மன் அவனை எதிர்த்துப் போர் செய்து அவனைக் கொன்றான். பிறகு, புலிகேசியின் தலைநகரமான வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்று அந்த நகரத்தையும் கைப்பற்றினான். இதனால் இவனுக்கு வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் பெயரும உண்டாயிற்று.

கூரம் செப்பேட்டுச் சாசனம் இவனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது :- “நரசிம்மவர்மனுடைய (சிம்ம விஷ்ணுவினுடைய) பேரன், உதயகிரியிலே சூரியனும் சந்திரனும் தோன்றியதுபோல இந்த அரசகுடும்பத்திலே தோன்றி, இந்த அரசகுடும்பத்தின் தலைவணங்கி யறியாத மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போன்று விளங்கிப் பகைமன்னராகிய யானைகளுக்கு அரிமா போன்று, நரசிங்க மூர்த்தியே மண்ணுலகத்தில் அரசகுமாரனாக அவதரித்தாற் போலப் பிறந்தான். இவன் சோழர் கேரளர் களபார் பாண்டியர்களைப் பலமுறை வென்று நூற்றுக் கணக்கான போர்களைச் செய்து ஆயிரங்கை படைத்தவனை (கார்த்த வீரியார்ச்சுனனைப்) போன்று விளங்கினான். மேலும் பரியளம், மணிமங்கலம், சூராமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புறங்காட்டி யோடிய புலிகேசியின் முதுகிலே விஜயம் (வெற்றி) என்னும் சொல்லைச் செம்புப் பட்டயத்தில் எழுதுவதுபோல எழுதினான். பிறகு, கும்ப முனி (அகத்தியர்) வாதாபியை (வாதாபி என்னும் அசுரனை) அழித்தது போல, வாதாபியை (வாதாபி நகரத்தை) அழித்தான்.”[1]

உதயேந்திரச் செப்புப் பட்டயம் இவ்வாறு கூறுகிறது: “பரியள மணி மங்கல சூரமார முதலான இடங்களில் வல்லப ராஜனைப் பலமுறை வென்று, வாதாபியை அழித்த அகத்தியரைப்போல வாதாபியையழித்த நரசிம்ம வர்மன், அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) மகனாகப் பிறந்தான்.”[2]

வேலூர்ப்பாளைய சாசனம் இவ்வாறு எழுதுகிறது: "உபேந்திரனை (விஷ்ணுவை)ப்போன்று புகழ்படைத்தவனும் பகைவர் கூட்டங்களை


  1. 1. A Pallava grant from Kuram. P. 144-155. S. I. I. Vol.I
  2. 2. Udayendram Plates of Nandivarman Pallava Malla. S. I. I. Vol. II. P. 361 - 371.