பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. கொங்கு நாட்டு வரலாறு

கொங்கு நாடு

கடைச் சங்க காலத்திலே, 1,800 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, அருவா நாடு, கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளு நாடும் சேர நாடும் மேற்குக் கடற்கரையோரத்தில் இருந்தன. துளு நாடு இப்போது தென்கன்னடம் வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந்திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டிநாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும் அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள்நாடாக அமைந்திருந்தது (முன்பக்கப்படம் காண்க).