பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

261


உதவியாக இருந்த இலங்கை மன்னன் மானவம்மா என்னும் மான வர்மன் மற்றொருவன். புலிகேசியை எதிர்த்த மூன்றாவது அரசன் யார்? இதற்கு விடை, கொடும்பாளூர் மூவர் கோவில் சாசனம் கூறுகிறது. புலிகேசியை எதிர்த்து வென்ற மூன்றாவது அரசன், (அரசர்) கொடும் பாளூர் மன்னன் பரதுர்க்கமர்த்தனனும் அவன் மகன் சமராபிராமனும் ஆவர்.

எனவே, மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், கொடும்பாளூர் நாட்டையரசாண்ட கொடும்பாளூர் வேளிரான சிற்றரசர்கள், பல்லவருக்கு உதவியாக இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.

மூவர் கோயில் சாசனத்தை ஆராய்ந்த சில சரித்திர ஆசிரியர்கள், பரதுர்க்க மர்த்தனனும் சமராபிராமனும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் அல்லர் என்றும் பிற்காலத்தவர் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் கூற்று ஆராய்ச்சிக்குப் பொருந்தவில்லை;

பாண்டிய நாடு

கொடும்பாளூருக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. நரசிம்மவர்மன் காலத்திலே, பாண்டிய நாட்டை அரசாண்டவன் நெடுமாறன் என்னும் பாண்டியன். இவன் சைவ அடியார்கள் அறுபத்து மூவரில் ஒருவன். "நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்டவன் இவனே. பெரியபுராணத்தில் கூன்பாண்டியன் என்றும் நெடுமாறன் என்றும் இவன் கூறப்படுகிறான். என்றும் நெடுமாறன் இவன் கூறப்படுகிறான். வேள்விக்குடி செப்பேட்டுச் சாசனம் அரி கேசரி, அசமசமன், அலங்க்யவிக்ரமன்,அகாலகாலன்,மாரவர்மன் என்று இவன் பெயர்களைக் கூறுகிறது.

பாழி, திருநெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலிய இடங்களில் நடைபெற்ற போர்களில் இவன் வெற்றி கண்டான்; பலமுறை கேரள (சேர) அரசனை வென்றான் என்று சாசனங்கள் இவனைப் புகழ்கின்றன. இறையனார் அகப்பொருள் உரையன் இடையிடையே மேற்கோள் காட்டப்படுகிற கோவைச் செய்யுள்கள் (பாண்டிக் கோவை) இவன் மீது பாடப்பட்டன என்பர்.

பாண்டியன் நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பின்னர், திருஞான சம்பந்தரால் சைவனாக மாற்றப்பட்டான்.