பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


சேரநாடு

பாண்டிய நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இந்தக் காலத்தில் சேரநாட்டில் இருந்த சேர அரசன் பெயரி தெரியவில்லை. ஆனால், இந்தச் சேரனைப் பாண்டியன் நெடுமாறன் பலமுறை வென்றான் என்று சின்னமனூர்ச் சாசனம் கூறுகிறது. இதனால், சேரநாடு பாண்டிய அரசுக்குக் கீழடங்கியிருந்தது என்பது தெரிகிறது.

இலங்கைத் தீவு

தமிழ்நாட்டின் அருகிலேயுள்ளது இலங்கைத் தீவு. இதற்குச் சிங்களத்தீவு என்றும் பெயர் உண்டு. இது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கைத் தீவின் அரசியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்போம்.

இக்காலத்தில் சிங்களத்தீவை அரசாண்ட மன்னன் கஸ்ஸபன் என்பவன். இவனை இரண்டாங் கஸ்ஸபன் என்பவர். கஸ்ஸபனுக்குப் பகைவனாக இருந்து அரசாட்சியைக் கைப்பற்றுவதற்காக அவனுடன் போராடியவன் தாட்டோபதிஸ்ஸன் என்பவன். இவ்விருவருக்கும் நடந்த போரிலே கஸ்ஸபன் வெற்றியடைந்தான். தோல்வியடைந்த தாட்டோப திஸ்ஸன், முடி முதலிய அரசு சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டான். ஆகவே, கஸ்ஸபன் முடி தரிக்காமலே இலங்கையை அரசாண்டான். தமிழ்நாட்டிற்கு வந்த தாட்டோ பதிஸ்ஸன் படைதிரட்டிக்கொண்டு இலங்கைக்குச் சென்று மறுபடியும் கஸ்ஸபனுடன் போர் செய்தான். அந்தப் போரிலே தாட்டோப் திஸ்ஸன் உயிர் துறந்தான், ஆனால், அவனுடன் இருந்த அவன் மருகனான ஹத்ததாட்டன் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்தான்.

கஸ்ஸபன் பல ஆண்டுகள் அரசாண்டான். இவனுக்குப் பல மக்கள் இருந்தார்கள். ஆனால், எல்லோரும் வயது நிரம்பாத சிறுவர்கள். இவர்களில் மானகன் (மானா) என்பவன் மூத்தவன். கஸ்ஸபன் நோய்வாய்ப்பட்டு தான் உயிர் பிழைக்க முடியாதென்று அறிந்து, உரோகண நாட்டிலிருந்த தன் தங்கைமகனான மானா என்பவனை அழைத்து, அவனிடம் தன் மக்களை ஒப்படைத்து, அவர்கள் வயது அடையும் வரையில் அரசாட்சியை நடத்தும்படி