பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கையின் வடபகுதியில்) ஒருவரும் அறியாமல் மறைந்து வசித்திருந் தான். கஸ்ஸப அரசன் மகனான மானா தன் நாட்டிலே மறைந்து வாழ்கிறான் என்பதையும் அவன் என்றைக்காவது தன்னை எதிர்த்து அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்பதையும் ஒற்றரால் அறிந்த தாட்டோபதிஸ்ஸன் அவன்மேல் கண் வைத்திருந்தான். தாட்டோப திஸ்ஸன் தன்னைத் தெரிந்து கொண்டான் என்பதை யுணர்ந்த மானா, உடனே புறப்பட்டுக் காஞ்சிபுரம் வந்து, நரசீகன் (நரசிம்மவர்மன்) இடத்தில்தான் இன்னான் என்பதையும் தன் வரலாற்றையும் கூறி, அவனிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலங் கொடுத்து ஆதரித்தான். பிறகு மானா இலங்கையிலிருந்த தன் மனைவியைக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துக்கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். இவன் பல்லவர்களைப் போலவே வர்மன் என்னும் பட்டத்தைத் தன் பெயருடன் சேர்த்து மானவர்மன் என்று வைத்துக் கொண்டான். இலங்கை நூல்கள் மானவர்மன் என்பதை மானவம்மா என்று கூறுகின்றன. மானவர்மன் பல ஆண்டுகள் நரசிம்மவர்மன் ஆதரவில் இருந்தான். சளுக்கியவேந்தன் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படையெடுத்து வந்தபோது, மானவர்மன் நரசிம்மவர்மனுக்கு உதவியாகப் போர் செய்தான்.

சில ஆண்டு கழிந்த பிறகு நரசிம்மவர்மன், மானவர்மனுக்குத் தன் சேனையைக் கொடுத்து இலங்கையரசைக் கைப்பற்றிக் கொள்ளும் படி அனுப்பினான். மானவர்மன் சேனையுடன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் வடகுதியைப் பிடித்துக்கொண்டு அநுடராதபுரத்தின்மேல் சென்றான். இதையறிந்த தாட்டோபதிஸ்ஸன் அநுரையை விட்டு ஓடினான். மானவர்மன் அநுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அவ் வமயத்தில், நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் நோயாய்க் கிடக்கிறான் என்று ஒரு வதந்தி பரவிற்று. அதைக்கேட்ட பல்லவச் சேனை வீரர்கள் உடனே காஞ்சிபுரத்திற்குப் போய்விட்டார்கள். மானவம்மா சேனைப் பலமில்லாமல் இருப்பதை யறிந்து, தாட்டோப திஸ்ஸன் அநுரையின் மேல் படையெடுத்து வந்தான். சேனைப் பலமில்லாத நிலையில், தாட்டோபதிஸ்ஸனுடன் போர்செய்து அறியாமையால் உயிரை இழப்பதைவிட, தப்பி ஓடி உயிர்பிழைத்து மற்றொருமுறை வந்து அரசாட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணி மானவர்மனும்