பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சைவசமய அடியார்கள்

நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த சைவ சமய அடியார்களை ஆராய்வோம். திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக்கலயர் முதலான சைவ அடியார்கள் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

திருநாவுக்கரசர்

இவர், திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே வாழ்ந்திருந்த புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து இளமையிலேயே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு, அக்காலத்திலே செழித்து வளர்ந்திருந்த சமண சமய நூல்களைக் கற்று அச் சமயத்தை மேற்கொண்டார். இவருடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக்கண்ட சமணர், இவருக்குத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துச் சமணசமயத் தலைவராக்கிப் பாடலிபுரத்தில் இருந்த சமண சமய மடத்தின் தலைவராக அமர்த்தினார்கள். நெடுங்காலமாக இவர் சமண சமயத் தலைவராக இருந்தார்.

தருமசேனருடைய முதுமை வயதில் இவருக்குச் சூலைநோய் உண்டாயிற்று. மணிமந்திர ஔஷதங்களினாலும் அந்நோய் தீராதபடி யினாலே, அவர் பெரிதும் வருந்தினார். பிறகு, இவருடைய தமக்கை யாரான திலகவதியாரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டார். பிறகு, இவருடைய சூலைநோய் தீர்ந்தது. அதுமுதல் பக்தி இயக்கத்தையும் சைவசமயத்தையும் பரவச் செய்யும் பணியில் இறங்கித் தமது ஆயுள் காலம் வரையிலும் அவற்றை செய்து கொண்டிருந்தார். சைவ சமயத்தில் சேர்ந்தபிறகு, இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் உண்டாயிற்று. பல்லவ அரசனான குணபரன் என்னும் மகேந்திரவர்மன் (கி. பி. 600-630) சமண சமயத்தவனாக இருந்தான். அவ் வரசனைத் திருநாவுக்கரசர் சைவசமயத்தில் சேர்த்தார். நரசிம்மவர்மன் அரசனானான். இவ்வரசன் காலத்திலும் இவர் வாழ்ந்திருந்தார்.