பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

275


சம்பந்தரும் கூன்பாண்டியன் என்னும் பாண்டியன் நெடுமாறனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். பின்னர்,

ஞானசம்பந்தரின் பதினாறாவது வயதில் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அத்திருமணத்தின் முடிவில் தோன்றிய ஒளியிலே, ஞானசம்பந்தரும் அத்திருமணத்திலிருந்த மற்ற எல்லோரும் புகுந்து மறைந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவருடைய பிரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் காண்க.

நெடுமாறர்

பாண்டிய மன்னனாகிய இவருக்கு நெடுமாறன் என்று பெயர். கூன்பாண்டியன் என்றுங் கூறுவர். வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வரசனை அரிகேசரி, அசம சமன், மாறவர்மன் என்று கூறுகிறது. சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் அரிகேசரி, அசம சமன், அலங்கிய விக்ரமன், அகாலகாலன், மாறவர்மன் என்னும் பெயர்களைக் கூறுகிறது. எனவே இவனுக்கு இப்பெயர்கள் எல்லாம் வழங்கியதாக அறிகிறோம். பாண்டிக்கோவை இவ்வரசன் மீது பாடப்பட்டதென்பர். இவன் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் என்னும் அரசன் காலத்தில் இருந்தவன். இவன் காலத்தில், தமிழ்நாடு எங்கும் சமணசமயம் சிறப்பாக இருந்ததுபோலவே, இவனுடைய பாண்டிய நாட்டிலும் சிறந்திருந்தது. இந்த அரசனும் சமண சமயத்தவனாக இருந்தான்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிநாடு சென்று சமண சமயத்தவனாக இருந்த இந்தப் பாண்டியனைச் சைவனாக்கினார்.2 இவன் சைவனானவுடனே 80 வயதுடையவரான திருநாவுக்கரசு நாயனார் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது, இப் பாண்டிய னும் இவன் அரசியான மங்கையர்க்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் நாவுக்கரசரை வரவேற்றார்கள். இப்பாண்டியன் வரலாற்றைப் பெரியபுராணம் நெடுமாறநாயனார் புராணத்தில் காண்க.

பிரம சூத்திரத்தின் பூர்வ மீமாம்சைக்கு ஆசாரிய சுந்தரபாண்டியர் என்பவர் ஒரு விரிவுரையெழுதியிருக்கிறார். அந்த உரையை, ஆதி சங்கராச்சாரியாரும் குமாரிலபட்டரும் தங்களுடைய பிரமசூத்திர பாடியத்திலே போற்றிப் புகழ்ந்திருப்பதோடு, அந்த உரைப் பகுதிகளையும் மேற்கோள் காட்டுகிறார்கள். இவ்வாறு இவர்களால் போற்றப்படுகிற ஆசாரிய சுந்தரபாண்டியர் என்பவர் நெடுமாற நாயனாராக இருக்கக்