பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன. நமக்குக் கிடைத்துள்ள வரையில், சங்க இலக்கியங்களில் கூறப்படுகின்ற கொங்கு நாட்டின் இடங்களைக் கீழே தருகிறோம்.

உம்பற் காடு (யானை மலைக்காடு)

இது கொங்கு நாட்டின் தென்மேற்கிலுள்ள யானை மலைப்பிரதேசம் (உம்பல் -யானை). இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தை அடுத்திருக்கின்றது. யானை மலைகள் சராசரி 7, 000 அடி உயரமுள்ளவை. யானைமுடி மிக உயரமானது. அதன் உயரம் 8,837 அடி. இங்குள்ள காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தது பற்றி யானை மலைக்காடு (உம்பற் காடு) என்று பெயர் பெற்றது.

சேர நாட்டு அரசர் கொங்கு நாட்டைப் பிடிக்கத் தொடங்கினபோது முதல் முதலாக யானை மலைப்பிரதேசத்தைப் பிடித்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் உம்பற் காட்டை வென்று கைப்பற்றினான். இவன், ‘உம்பற்காட்டைத் தன்கோல் நிரீஇயினான்’என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப்பதிகங் கூறுகின்றது. அவனுடைய தமயனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (செங்குட்டுவனுடைய தந்தை) தன்மீது 2 ஆம் பத்துப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்தான் (இரண்டாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு) சேரன் செங்குட்டுவன் தன்மீது ஐந்தாம் பத்துப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டு வாரியை (வருவாயை)க் கொடுத்தான் (ஐந்தாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு). இதனால் யானை மலைப் பிரதேசங்களைச் சேர மன்னர் கைப்பற்றி இருந்தார்கள் என்பது தெரிகின்றது. உம்பற் காட்டில் பல ஊர்கள் அடங்கியிருந்தன.

ஓகந்தூர்

இது கொங்கு நாட்டிலிருந்த ஊர். இது இருந்த இடம் தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் இந்த ஊரைத் திருமால் கோயிலுக்குத் தானஞ் செய்தான் என்று பதிற்றுப்பத்து ஏழாம் பத்துப் பதிகங் கூறுகிறது.