பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


காலங்களிலும் கருவூர் கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. இது ஒரு பெரிய வாணிக நகரமாகவும் இருந்தது. சங்கப் புலவர்களில் சிலர் இவ்வூரினராவர்.

கண்டிரம்

இப்பெயரையுடைய ஊர் கொங்கு நாட்டிலிருந்தது. அது எந்த இடத்திலிருந்தது என்பது தெரியவில்லை. கண்டிர நாட்டில் பெரிய மலையொன்று தோட்டிமலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டீரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவன் நள்ளி என்னும் பெயருடையவன். தோட்டிமலையையும் அதன் அரசனாகிய நள்ளியையும் வன்பரணர் கூறுகின்றார்.1

கண்டிர நாட்டின் சோலைகளிலே காந்தள் முதலிய மலர்கள் மலர்ந்தன என்று பரணரும் கபிலரும் கூறுகின்றனர் (அகம் 152: 15-17, 238: 14-18). நள்ளியின் கண்டிர நாட்டுக் காடுகளில் இடையர் பசு மந்தைகளை வளர்த்தனர் என்றும், அவ்வூர் நெய்க்குப் பேர் போனது என்றும் காக்கைபாடினியார் கூறுகிறார்.[1] கண்டிரத்துக் காட்டில் யானைகளும் இருந்தன. கண்டிர நாட்டில் நள்ளியின் பெயரால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்ததைக் கொங்கு நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகின்றது.

கட்டி நாடு

கட்டி நாடு என்பது தமிழகத்தின் வடக்கேயிருந்தது. அது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. கட்டி நாட்டையாண்ட அரசர் பரம்பரையார் ‘கட்டியர்’, ‘கட்டி’ என்று பெயர் பெற்றிருந்தனர். கட்டி நாட்டின் வட எல்லை வடுக (கன்னட) நாட்டின் எல்லை வரையில் இருந்தது. கட்டி நாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம் (வேறு மொழி கன்னட மொழி) பேசும் தேசம் இருந்தது. கட்டி நாடு வடகொங்கு நாட்டில் இருந்தது. கட்டியரசு பரம்பரை விசயநகர அரசர் காலத்திலும் இருந்தது.

காமூர்

இதுவும் கொங்கு நாட்டிலிருந்த ஊர். இங்கு இடையர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவன் கழுவுள். கழுவுளின் காமூரில் பலமான கோட்டையிருந்தது. அது ஆழமான அகழியையும் உயரமான

  1. 2. ‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி - கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் - ஆயர், இடையர்)