பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
335
வரகுண மகாராசன் இலங்கையை வென்றதாகக் கூறாமல், அவன் மகன் ஸ்ரீ மாறன் இலங்கையை வென்றதாகக் கூறுகிறது.[1]
ஸ்ரீ மாறன்
வரகுண பாண்டியனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறன் பாண்டிய நாட்டின் அரசனானான். ஸ்ரீ மாறனுக்கு ஏகவீரன், ஸ்ரீ வல்லபன், பரசக்கர கோலாகலன், பல்லவ பாஞ்சனன், அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் அரசாண்ட காலம் ஏறக்குறைய கி.பி. 840 முதல் 861 வரையில் ஆகும். இவன் குன்னூர், சிங்களம் (இலங்கை), விழிஞம் என்னும் ஊர்களில் பகைவர்களுடன் போர் செய்து வென்றான் என்றும், குடமூக்கில் (கும்பகோணத்தில்) வந்து இவனை எதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் முதலியவர்களின் கூட்டுச் சேனையை வென்றான் என்றும் ம் சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.[2] இப் போர்களில், சிங்களப் போரை, இவன் இளவரசனாக இருந்தபோது செய்தான் என்று முன்னமே கூறினோம்.
வரகுண பாண்டியனுடைய மகன் அரசாண்ட காலத்தில், சோழ அரசன் கருநாடகருடன் சேர்ந்து பாண்டியனுடன் போர் செய்ய வந்தான் என்றும், சொக்கப் பெருமான் அட்டாலைச் சேவகனாக வந்து பாண்டியன் சேனையுடன் சேர்ந்து, விடைக் குறியம்பு எய்து பகைவரை வென்று பாண்டியனுக்கு வெற்றியுண்டாக்கினார் என்றும் பழைய திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
"வரகுண மன்னவற்கு மனமகிழ் மைந்தன் வென்றிப்
பொருவிலா அறிவினானோர் பூழியன் மதுரை தன்னுள்"
என்றும்,
"வரகுணன் மைந்தன் என்று வந்தித்தான் அன்றுமுன்னாப்
பரவு பாண்டியர்கள் எல்லாம் வந்தித்தார் பகைகள்தீர”
என்றும் மேற்படி புராணம் கூறுவது காண்க.[3]
இதில், வரகுணன் மைந்தன் என்று கூறப்படுபவன் ஸ்ரீ மாறன் ஆவான். இவன்மேல் படையெடுத்துச் சென்ற சோழன், பல்லவ அரசன் சார்பாகச் சென்றிருக்க வேண்டும்; அக்காலத்தில் சோழன் பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தவனாகலின்.