பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


ஒருவர். சேரநாட்டை யாண்ட செங்கோற் பொறையன் என்னும் சேர அரசன், அரசாட்சியைத் துறந்து சென்ற பிறகு, அமைச்சர்கள், அரசாட்சிக்கு உரியவராகிய பெருமாக் கோதையாரையே அரசராகத் தேர்ந்தெடுத்தனர்.[1]

அக்காலத்தில் சேரநாடு தமிழ்நாடாகவே இருந்தது. மலையாள மொழி அக்காலத்தில் ஏற்படவில்லை. ஆனால் மலையாள நாடு என்று மட்டும் பெயர் பெற்றிருந்தது.

சேரமான் பெருமாள் (பெருமாக் கோதையார்) சிவபக்தர் மட்டுமல்லர்; சிறந்த புலவரும் ஆவர். இவர் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) என்னும் நூல்கள் சைவ சமயத் தாருக்குரிய பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

பாணபத்திரன் என்னும் இசைப் புலவனுக்குப் பொருள் கொடுத்தனுப்பும்படி சொக்கப் பெருமானாகிய ஆலவாய்க் கடவுள், இந்தச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பினார் என்றும் அதன்படியே இச்சேர அரசன் பாணபத்திரருக்குப் பெரும் பொருளை நன்கொடையாகக் கொடுத்தனுப்பினார் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. இவ்வரலாறு பெரும்பற்ற நம்பி திருவிளை யாடற் புராணத்திலும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திலும்[2] பெரிய புராணத்திலும்[3] கூறப்படுகிறது.

பாணபத்திரல், வரகுணபாண்டியன் அவையில் இசைப்புலவ ராக இருந்தார் என்று பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.[4] இதனால், வரகுண மகாராசன் என்னும் பாண்டிய அரசன் காலத்திலே சேரமான் பெருமாள் இருந்தார் என்பது தெரிகிறது. வரகுணபாண்டியன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவன் என்று முன்னமே அறிந்தோம்.

சுந்தரும் சேரமானும்

சிவபக்தராகிய சேரமான் பெருமாள், சைவ சமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புடையவராக இருந்தார். இருவரும் சேர்ந்து தல யாத்திரை செய்தார்கள். இவர்கள் பாண்டிய நாட்டில் தல யாத்திரை செய்தபோது, பாண்டிய அரசனுடனும் அவன் மகளை

  1. 24
  2. 25
  3. 26
  4. 27