பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

33


கோட்டை மதிலையுங் கொண்டிருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை காமூரை வென்று அதைத் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். பெருஞ்சேரலிரும்பொறை காமூரை முற்றுகையிட்டபோது வேளிர்கள் (சிற்றரசர்) அவனுக்கு உதவியாக இருந்தார்கள்.

குதிரைமலை

இது கொங்கு நாட்டிலிருந்த மலை. இதை ‘ஊராக் குதிரை’ என்று கூறுகிறார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் (ஊராக்குதிரை சவாரி செய்யமுடியாத குதிரை. அதாவது குதிரைமலை). ‘மைதவழ் உயர் சிமைக் குதிரைமலை’ என்று இம்மலையை ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார் (அகம் 143 : 13). குதிரை மலையையும்அதனைச் சார்ந்த நாட்டையும் பிட்டங்கொற்றன் அரசாண்டான். இம்மலையில் வாழ்ந்த குறவர்கள் மலைச்சாரலில் தினையரிசியைப் பயிர் செய்து அந்த அரிசியைக் காட்டுப் பசுவின் பாலில் சமைத்து உண்டார்கள் (புறம் 168: 1-14). குதிரைமலை, உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததென்று கருதுகின்றார்.

நன்றாமலை

இது கொங்கு நாட்டில் இருந்த மலை. இந்த மலையின் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு இதைச் சூழ்ந்துள்ள ஊர்கள் தெரிந்தன ஆகையால் இது ‘நாடுகாண் நெடுவரை’ என்று (பதிற்று. 9 ஆம் பத்து5:7) கூறப்படுகின்றது. “நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய” மலை என்று இதற்குப் பழைய உரையாசிரியர் விளக்கம் கூறுகின்றார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் 7 ஆம் பத்துப் பாடியபோது அவருக்கு அவ்வரசன் இந்த மலைமேலிருந்து கண்ணிற் கண்ட நாடுகளைக் காட்டி அந்நாடுகளின் வருவாயை அவருக்குப் பரிசாக அளித்தான் என்று 7 ஆம் பத்து அடிக்குறிப்புக் கூறுகின்றது. “பாடிப் பெற்ற பரிசில், சிறுபுறமென நூறாயிரங் காணங்கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாங் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்று அடிக்குறிப்புக் கூறுகின்றது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர் காலத்தில் இவ்வூர் திருநணா என்று பெயர் வழங்கப்பட்டது.