342
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
மலைய நாட்டிலே ஓடி ஒளிந்த சேனன், பாண்டியனுடன் சமாதானம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டான். யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்து அவனுடன் சமாதானம் செய்துகொண்டான். ஆகவே பாண்டியன் இலங்கையை விட்டுத் தன் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டான்.
சேனன், தலைநகரமாகிய புலத்தி நகரத்துக்குத் திரும்பி வந்து அரசாண்டான். தன் கடைசி தம்பியாகிய உதயனை யுவராசனாக்கினான். சிறிது காலத்தில் உதயன் இறந்து விடவே, தன் மூத்த தம்பியாகிய கஸ்ஸபன் மகன் சேனன் என்பவனை யுவராசனாக்கினான். இவனுடைய அமைச்சர்கள் உத்தரன், வஜிரன், ரக்கஸன் என்பவர். சேனன் இருபது ஆண்டு அரசாண்டான்.
(சேனன் மேல் போர் செய்த பாண்டியன் பெயரைச் சூலவம்சம் என்னும் நூல் கூறவில்லை. பாண்டியன் வரகுண மகாராசன் இப்போரை நடத்தியிருக்க வேண்டும் வரகுண மகாராசன், நேரில் இலங்கைப் போரை நடத்தவில்லை. அவனுடைய மகனும் இளவரசனுமான ஸ்ரீ மாறனுடைய தலைமையில் இலங்கைப் போர் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.)
ஸ்ரீ சங்க போதி
சேனன் இறந்த பிறகு, யுவராசனாக இருந்த சேனன் அரசனானான். இந்தச் சேனன், முதலாம் சேனனுடைய மூத்த தம்பியாகிய கஸ்ஸபனின் மகன். இந்தச் சேனனை இரண்டாம் சேனன் என்பர். இவனுக்கு ஸ்ரீ சங்க போதி என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 841 முதல் 876 வரையில் அரசாண்டான் என்று முன்னமே கூறினோம். இவனுடைய சேனாபதி குட்கன் என்பவன். இவன் அரசாட்சிக்கு வந்தபோது, முன்பு பாண்டியன் இலங்கையிலிருந்து கொண்டுபோன் பொருள்களை எல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். அதற்காக அவன் பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வரச் சமயம் பார்த்திருந்தான். அப்போது, அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.
பாண்டிய நாட்டிலே பாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், (மாயா பாண்டியன் என்பவன்) பாண்டிய நாட்டின் அரசுரிமைக்காகக் கலகம் செய்தான்.29 பாண்டியன் அவனை விரட்டித் துரத்திவிட்டான்.