34
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
விச்சி நாடு
சங்க காலத்துக் கொங்கு நாட்டிலே இருந்த ஊர்களில் விச்சி என்பதும் ஒன்று. பச்சைமலை என்று இப்போது பெயர் வழங்குகிற மலை அக்காலத்தில் விச்சிமலை என்று பெயர் பெற்றிருந்தது. சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் விச்சிமலை (பச்சைமலை) இருக்கின்றது. இந்த மலை ஏறக்குறைய 200 மைல் நீளம் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்துக்குமேல் ஏறத்தாழ 2000 அடி உயரம் உள்ளது. மலையின் மேலே வேங்கை, தேக்கு, கருங்காலி, சந்தனம், முதலிய மரங்கள் உள்ளன. விச்சி நாட்டு மலைப் பக்கங்களில் பலா மரங்கள் இருந்தன என்று கபிலர் கூறுகிறார் (புறம் 200 :1-2) விச்சி மலைமேல் ‘ஐந்தெயில்’ என்னும் கோட்டையிருந்தது. அது காட்டரண் உடையதாக இருந்தது. விச்சி நாட்டையரசாண்ட பரம்பரையாருக்கு விச்சிக்கோ என்று பெயர் இருந்தது. கொங்குச் சேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை வென்று விச்சி நாட்டைக் கைப்பற்றினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகின்றது.
வெள்ளலூர்
கோயம்புத்தூருக்குத் தென்கிழக்கில் ஐந்து மைல் தூரத்தில் இவ்வூர் இருக்கின்றது. இங்குப் ‘பழங்காலத்துப் பாண்டு குழிகள்’ உள்ளன. இந்தப் பண்டவர் குழிகளிலிருந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. 1842ஆம் ஆண்டில் இவ்வூரில் பழங்காசுப் புதையல் ஒரு மண்பாண்டத்தில் கிடைத்தது. அப்புதையலில் 522 உரோம் தேசத்து நாணயங்கள் இருந்தன. அந்தக் காசுகளில் உரோமாபுரிச் சக்கரவர்த்திகளான அகஸ்தஸ், தைபீரியர், கலிகுல்லா, கிளாடியஸ் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கப்பட்ட காசுகள். இதிலிருந்து அக்காலத்தில் இந்த ஊரில் யவனருடன் வியாபாரத் தொடர்பு இருந்தது என்பது தெரிகின்றது.
வையாவி நாடு
இது கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வைகாவூர் என்றும் வையாபுரி என்றும் பெயர் வழங்கப்பட்டது. இது இப்போது மதுரை மாவட்டத்து மதுரை தாலுகாவில் இருக்கின்றது. பழனி மலை வட்டாரம் பழைய வையாவி நாடாகும். வையாவி நாட்டின்