1. பாண்டியர்
பாண்டிய நாடு தமிழகத்தின் தென்கோடியில் கிழக்கே வங்காளக் குடாக் கடலையும், தெற்கே குமரிக் கடலையும், மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. யவனர் இம் மூன்று கடல்களையும் செங்கடல் என்றும் பொருட்பட எரித்திரையக்கடல்[1] என்று அழைத்தனர். பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் உள்ளது. இராமேசுவரத்திற்கு வடபால் உள்ள கடற்பகுதி ‘பாக்' கடலிணைப்பு என்றும், தெற்கிலுள்ள சிறு பகுதி ‘மன்னார் வளைகுடா' என்றும் வழங்கப்படுகின்றன. இக் கடற்பகுதிகளைப் பெரிபுளூஸ் நூல் ‘ஆர்கலஸ்’[2] என்றும், தாலமி 'ஆர்கலிக் கடல்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதனால் ‘ஆர்கலி கடல்' என்னும் பெயர்[3] இப் பகுதிக்கு வழங்கியதாகக் கொள்ளலாம்.[4]
இப்போது இராமேசுவரம் இருக்கும் பாம்பன் தீவு முற்காலத்தில் பாண்டிய நாட்டோடு இணைந்திருந்தது. நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர் வந்து வாணிகம் செய்த காலத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து இந் நிலப்பகுதி கரைந்து தீவாக உருக் கொண்டது. ஆகையால், சங்க காலத்தில் இந்தத் தீவு பாண்டிய நாட்டோடு இணைந் திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ள இலங்கைத் தீவும் பாண்டிய நாடும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கிலும், கிழக்கிலும் அக்காலத்தில் நிலங்கள் இருந்தன. பின்னர் அவ்வப்போது தோன்றிய புயல்களினாலும், கடல் கொந்தளிப்பினாலும் கரைந்தும் சிதைந்தும் அந்நிலப் பகுதிகள் மறைந்துபோயின. இப்பொழுது இலங்கை என்று வழங்கப் பெறும் நிலப்பகுதி சங்க காலத்தில் ‘ஈழம்’ எனப் பெயர் பெற்றிருந்தது.
இலங்கை தனியாகப் பிரிந்துபோன பிறகும், எஞ்சியிருந்த நிலப்பகுதிகளில் பல, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் முழுகிப் போயின. முழுகிப்போன பகுதிகளில் பல பாண்டியருடைய ஆட்சியில்இருந்தன. பாண்டிய அரசர்கள் அமைத்திருந்த தலைச்சங்கம். இடைச்சங்கம் என்ற இரண்டு தமிழ்ச் சங்கங்களும், கடலில் மூழ்கிப்போன நாட்டில் இருந்தன என்று பழைய செவிவழிச் செய்தி கூறுகிறது. சிலப்பதிகார-