பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



சிலம்பாறு

திருமாலிருஞ்சோலை மலையில் தோன்றிப் பாய்ந்தது.17

பஃறுளியாறு

இது கன்னியாகுமரிக்குத் தெற்கிலிருந்த ஓர் ஆறு. கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன் கடல்கோளினால் மறைந்து போயிற்று. குமரியாறும் மேற்கூறப்பெற்ற கடல்கோளினால் மறைந்தது.18

துறைமுகப் பட்டினங்கள்

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் நிலைபெற்றிருந்த தொண்டி, மருஞ்கூர்ப்பட்டினம், கொற்கை, குமரி, விழிஞம் முதலிய துறை முகங்களைப்பற்றிச் சற்று விரிவாகக் காணலாம். இக்காலத்தில் தொண்டி என்ற துறைமுகங்கள் இரண்டில் ஒன்று மேற்குக் கரையில் சேர நாட்டிலும், மற்றொன்று பாண்டியநாட்டுக் கிழக்குக் கரையிலும் இருந்தது. கிழக்குக் கரையிலிருந்த தொண்டி, பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது. இத்துறைமுகத்தில் கிராம்பு, இலவங்கம், தக்கோலம், சாதிக்காய், கற்பூரம் முதலிய நறுமணப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பெற்றன.19 இத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் மறைந்து இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் சிற்றூராக இருக்கிறது. மருங்கூர்ப்பட்டினம் மருங்கை என்றும் வழங்கியது. இதற்கு மேற்கில் ஊணூர் என்னும் இடமும், அதைச் சூழ்ந்து மதிலும், அம் மதிலைச் சூழ்ந்து நெல் வயல்களும் இருந்தன.20 நெல் வயல்கள் மிக் கிருந்த ஊர் சாலியூர் இதற்கும் நெல்லினூர் என்னும் பெயர் பெற்றிருந்த ஊருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். நெல்லினூர்த் துறைமுகத்தில் பெரிய நாவாய்கள் தங்கிச் சென்றன. தாலமி என்ற யவன ஆசிரியர், ‘சாலோர்’ என்று குறிப்பிடும் இடம் சாலியூர் ஆகலாம்.21

கொற்கை, குமரி, விழிஞம்

உலகப் புகழ்பெற்ற பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினம் கொற்கையாகும். இத் துறைமுகம் ஒரு வளைகுடாவில் இருந்ததனால் முத்துக் குளிக்கும் இடமாகவும், சங்கு எடுக்கும் இடமாகவும் விளங்கியது. கொற்கையில் கிடைத்த முத்துகள் உலகப் புகழ் பெற்றவையாகும். சங்கப் புலவர்களும் இங்குக் கிடைத்த முத்துகளின் பெருமையைப் புகழ்ந்துள்ளளனர். கொற்கை, பாண்டிய இளவரசர்களுடைய இருக்கை-