பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


அறிமுகமாகிறான்.[1] மற்றொருவன் ‘போர்’ என்னும் ஊரின் தலைவன். மோகூர்ப் பழையன் பாண்டிய அரசர்களுக்கு உறுதுணையாய் விளங்கியவன். போர்ப் பழையன் சோழர் படைத்தலைவன். வித்தை என்னும் இடத்தை ஆண்ட அரசன் ‘இளம் பழையன்’ மாறன் என்னும் பெயர் பெற்றுள்ளான்.[2] மோகூர் அரசனைச் சேரன் செங்குட்டுவன் வென்றான். விந்தை அரசன் இளம்பழையன் மாறனை இளஞ்சேரல் இரும்பொறை வென்றான். போர் அரசன் பழையனை நன்னன் முதலான ஏழுபேர் கூட்டாகத் தாக்கிப் போரில் கொன்றனர். மாறன் என்றால் இவனையே குறிக்கும் அளவிற்கு இவனது பெயர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் பரவியிருந் தமையால் இவன், பெரும்பெயர் மாறன் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறான்.[3] பாண்டியன், மோகூரின் ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்திருந்தான்; கோசர் இவனது அரசவையைச் சிறப்பித்தனர்.[4] இவனுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் கூடல் நகரில் ஒரு போர் நடந்தது.[5]

கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோவலனது கொலையால் இவன் தன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப் பெற முயன்றான்.[6] அந்த முயற்சியில் சோழன் கிள்ளிவளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் வசமாகிவிட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன் பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாகச் சில காலம் ஆண்டுவரச் செய்தான்.

பசும்பூண் பாண்டியன் சோழருக்குட்பட்டு அவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு, நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலையுணர்வைத் தூண்டி தன்னாட்சி பெறும் மனப்பான்மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றிவேற்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி மதுரையைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வெற்றியில் சோழனும் சேரனும் தோல்வியுற்றத்தை அவனது வரலாற்றில் காணலாம்.

  1. 78
  2. 79
  3. 80
  4. 81
  5. 82
  6. 83