பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

399




போர்கள்

முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான். இமயமலைக்கு வடக்கிலுள்ள நாடுகளிலும், குமரி முனைக்குத் தெற்கிலுள்ள கடல் தீவுகளிலும், கீழைக்கடலிலும், மேலைக்கடலிலும் இருந்த தீவுகளிலும் இவனது புகழ் பரவியது.[1] இவனிடம் கடற்படையும் யானைப்படையும் இருந்தனவாகக் கருதலாம். இவற்றைக்கொண்டு இவன் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். தான் வெற்றிபெற்ற இடங்களில் கிடைத்த செல்வங்களைக்கொண்டு தன்னிடம் பரிசில் நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கினான். நல்வேள்ளி என்று சிறப்பிக்கப்படும் வேள்வியை இவன் செய்தான்.[2] கள்ளும் கறிச் சோறும் அளித்தான், போரில் வெற்றிபெற உதவியவர்களையும் வெற்றி பெற்றபின் பாராட்டியவர்களையும் தானே அழைத்து, வேண்டிய பரிசில்களைக் கொடுத்துக் கொண்டாடும் வேள்வி, நல்வேள்வியாகும்.[3] இந்த நல்வேள்வியில் நான்மறை முனிவரை இவன் பாராட்டாதது கண்ட புலவர் ஒருவர்[4] மனம் வருந்தி நான்மறை முனிவர்க்குத் தலை வணங்கியும், சிவ பெருமான் நகர்வலம் வரும்போது தன் குடையைச் சாய்த்துப் பிடித்தும் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினார். முதுகுடுமி, புலவர் அறிவுரையை ஏற்று அவர் விருப்பப்படி செய்தான். நான்மறை முறைப்படி யூபம் என்னும் வேள்வித் தூண்கள் பல நட்டான், நான்மறை வல்ல அந்தணர்களைக் கொண்டு பல வேள்விகளைச் செய்வித்தான்.[5] இவ்விதம் பல வேள்விகளைச் செய்தமையால் இவன் ‘பல்யாகசாலை' என்னும் அடைமொழியுடன் வழங்கப்பட்டான்.

புலவர்களுக்கும் பொற்றாமரைப் பூக்களைப் பரிசளித்துச் சிறப் பித்ததும், புலவர்களுக்கு யானைகளையும், தேர்களையும் பரிசில்களாக நல்கியதும் இவனது கொடைகளில் நினைவுகூரத் தக்கவை.

பகைவர் நாட்டின் தேர் சென்ற தெருக்கள் எல்லாவற்றிலும் கழுதைகளைப் பிணைத்துத் திரியவிட்டதும். அறுவடை செய்யும் நிலையில் உள்ள விளைச்சல் வயல்களில் தன்னுடைய தேர்ப்படையுடன் சென்று பாழாக்கியதும் இவன், தனது பகைவர்கள் நாட்டிற்குச் செய்த கொடுமையாகும். இஃது அக்காலப் போர் மரபாகக் கருதப் பட்டதுபோலும். முதுகுடுமி என்னும் இவனது பெயர் முதுமையை உணர்த்தும் நரைத்தலை முடி உடையவனாக இவன் விளங்கியதால் அமைந்திருக்கலாம். போரில் மிகுதியாகப் பழகியதால், இவனது

  1. 93
  2. 94
  3. 95
  4. 96
  5. 97