பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


மனைவிமார் ஊடல் கொண்டபோதும் அன்பாகப் பேசாமல் அடக்கு முறையைப் பின் பற்றி வந்தான். இதனால் மகளிர் சினந்தால், எதிராகச் சினங்கொள்ளக்கூடாது என்று புலவர் இவனுக்கு அறிவுரை கூறினார்.[1]

கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி[2]

இவனது பெயரை நமக்கு அறிவிப்பவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியரே ஆவர். அவர் ஓரிடத்தில் கடந்த என்னும் சொல்லாலும் மற்றோரிடத்தில் ‘தந்த’ என்னும் சொல்லாலும் இவனைக் குறிப்பிடுகிறார். கானப்பேர் எயில்பற்றியும், அதனை வேங்கைமார்பன் என்பவன் ஆண்டதுபற்றியும், காவற்காடு. காவல் சிற்றூர்கள், ஆழ்ந்த அகழி, உயர்ந்த மதில், முன் பூத்தன்ன ஞாயில் ஆகியவற்றைக் கொண் டிருந்த தன் கானப்பேர் எயில் கோட்டையைப் பறிகொடுத்துவிட்டு வேங்கைமார்பன் ஓலமிட்டு வருந்தியது பற்றியும் சங்கப் பாடல்களில் தெளிவான செய்திகள் உள்ளன. இந்த வெற்றி இவனது வரலாற்றில் மிகவும் சிறப்புடையதாய் விளங்கியதுபற்றி, இவன் ‘கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டான்.

மூவேந்தர் நட்பு

தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக எண்ணத்தக்க மூவேந்தர் நட்பு இவன் காலத்தில் அமைந்தது. சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோருடன் இவனும் சேர்ந்து முத்தீப் போல அமர்ந்திருந்து செயல்படும் காட்சியைப் புலவர் ஒருவர் கண்டு வாழ்த்தியுள்ளார்.[3] பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துத் தரவேண்டும் என்றும், மகளிர் பொற்கலத்தில் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து களித்திருக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாழ்த்தினார்.

மூவேந்தரின் இத்தகைய கூட்டுறவு பாரியைப் பொறுத்தமட்டில் தீதாய் முடிந்தாலும், தமிழைப் பொறுத்தமட்டில் நன்மையாக முடிந்தது. தமிழ்நாட்டு மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. பாண்டியன் தமிழில் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டான். உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. நெடுந்தொகை அல்லது அகநானூறு என்னும் நூலைத் தொகுக்கும் பணியைத் தானே மேற்கொண்டான்; உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரைத் தலைமைப் புலவராக அமர்த்தி அத் தொகுப்புப் பணியைச்

  1. 99
  2. 100
  3. 101